தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் செலவு செய்தது ரூ.60,000 கோடி!

தினமலர்  தினமலர்
தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் செலவு செய்தது ரூ.60,000 கோடி!

புதுடில்லி: லோக்சபா மற்றும் சில மாநில சட்டசபைகளுக்கு, சமீபத்தில் நடந்த தேர்தலின் போது, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும், 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், அதில், 45 முதல், 50 சதவீதம் வரை, பா.ஜ., தரப்பிலும், 15 முதல், 20 சதவீதம் வரை காங்கிரஸ் தரப்பிலும் செலவு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தல்களுக்காக, 820 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையத்தில், காங்., தலைமை கணக்கு தாக்கல் செய்துள்ளது.

லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலின் போது, பா.ஜ., 714 கோடி ரூபாயும், காங்., 516 கோடி ரூபாயும் செலவு செய்ததாக, தேர்தல் ஆணையத்தில் கணக்கு தாக்கல் செய்தன. தேர்தல் செலவுகளில், காங்., - பா.ஜ., இடையே, 2013 முதலே அதிக வித்தியாசம் இருந்து வருகிறது. காங்.,கை விட, பா.ஜ., அதிக நிதி திரட்டி, செலவு செய்யும் போக்கை கவனிக்க முடிகிறது.

செலவு கணக்கு:

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்களுக்கு செலவான கணக்கை, தேர்தல் ஆணையத்தில், காங்., தலைமை, சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில், 820 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக, கணக்கு கொடுத்துள்ளது. இதில், 626 கோடி ரூபாய் தேர்தல் விளம்பரங்களுக்காகவும், 194 கோடி ரூபாய் வேட்பாளர்களுக்காகவும் செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகை, 'டிவி' மற்றும் இணையதள விளம்பரங்களுக்கு, 356 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பிரசாரத்தின் போது, ராகுலின் விமான பயணத்துக்காக மட்டும், ரூ.40 கோடியும், மற்ற வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்களின் விமான பயணத்துக்கு, ரூ.86 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில், ஊடக விளம்பரங்களுக்காக அதிக தொகையை, காங்., செலவிட்டுள்ளது. ம.பி.,யில், 24 கோடி ரூபாயும், கேரளாவில், 17.3 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ., தரப்பிலான தேர்தல் செலவு கணக்கு, இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. அது தாக்கல் செய்யப்பட்ட பின், இன்னும் விரிவான பார்வை கிடைக்கும் என, கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா மற்றும் சில மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் செலவு குறித்து, டில்லியை சேர்ந்த, சி.எம்.எஸ்., எனப்படும், ஊடக கல்வி மையம் என்ற அமைப்பு, கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

கள ஆய்வுகள்:

இது குறித்து, சி.எம்.எஸ்., நிறுவன தலைவர் பாஸ்கர் ராவ், கூறியதாவது: சமீபத்தில் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும், 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை, பணம் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகையில், பா.ஜ., தரப்பில் 45 முதல் 50 சதவீதம் வரையிலும், காங்., தரப்பில் 15 முதல் 20 சதவீதம் வரையிலும், செலவிடப்பட்டு உள்ளன. இந்த தொகை, விளம்பரங்கள், போக்குவரத்து மற்றும் ஓட்டுக்காக பணம் கொடுத்த வகையில் செலவாகி உள்ளதாக, கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த தொகை, 2024 லோக்சபா தேர்தலின் போது, 1 லட்சம் கோடியாக உயரும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இந்த செலவுகளை கட்டுப்படுத்த தவறினால், ஊழல் பெருகுவதையும் நம்மால் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. பெரு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், தேர்தல் பத்திரங்கள் வாங்கும் நடைமுறை, 2017ல் அமலுக்கு வந்த பிறகு தான், தேர்தல் செலவுகளில் இந்த திடீர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

அதற்கு முன், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள், தங்கள் மூன்றாண்டு நிகர லாபத்தில், 7.5 சதவீத தொகையை மட்டுமே நிதியாக வழங்க முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது, யார் வேண்டுமானாலும், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அளிக்க கூடிய நிலை உருவாகி உள்ளது. இதனால், ஒரு தொகுதிக்கு, 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை