பி.எஸ்.என்.எல்.,லில் ஓய்வு பெற விரும்புவோர் 60,000 பேர்!

தினமலர்  தினமலர்
பி.எஸ்.என்.எல்.,லில் ஓய்வு பெற விரும்புவோர் 60,000 பேர்!

புதுடில்லி: மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று வரை, இந்த திட்டத்தின் கீழ், 60 ஆயிரம் ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற மனு கொடுத்துள்ளதாக, தொலை தொடர்புத்துறை செயலர் தெரிவித்தார்.

மத்திய அரசு நிறுவனமான எம்.டி.என்.எல்., எனப்படும் மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் டில்லியில், தொலை தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல்., எனப்படும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம், மற்ற மாநிலங்களில், தொலை தொடர்பு சேவையை அளித்து வருகிறது.

நஷ்டம்:


இந்த இரு அரசு நிறுவனங்களும், 40 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்தன. இதையடுத்து, இதில் பணிபுரியும், 50 மற்றும் 50 வயதை கடந்த ஊழியர்களுக்கு, வி.ஆர்.எஸ்., எனப்படும், விருப்ப பணி ஓய்வு வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்துக்கு தகுதியான ஊழியர்கள், நவம்பர், 5 முதல், டிசம்பர், 3 வரை, விருப்ப ஓய்வு பெறலாம் என, அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும், பி.எஸ்.என்.எல்.,லை சேர்ந்த, 40 ஆயிரம் ஊழியர்கள், வி.ஆர்.எஸ்., பெற, விருப்பம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களை சேர்ந்த, 60 ஆயிரம் ஊழியர்கள், வி.ஆர்.எஸ்., பெற, இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளதாக, தொலைத் தொடர்புத்துறை செயலர் அன்ஷு பிரகாஷ் தெரிவித்தார்.

இது பற்றி, அவர் கூறியதாவது: நாடு முழுவதும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில், 1.5 லட்சம் பேரும், எம்.டி.என்.எல்., நிறுவனத்தில், 22 ஆயிரம் பேரும் பணியாற்றி வருகின்றனர். இந்த இரு நிறுவனங்களிலும், வி.ஆர்.எஸ்., திட்டம், 5ம் தேதி அமல்படுத்தப்பட்டுள்ளது, அடுத்த மாதம், 3ம் தேதி வரை, இந்த திட்டம் அமலில் இருக்கும்.

திட்டம்:


இதுவரை, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 57 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற மனு கொடுத்துள்ளனர். எம்.டி.என்.எல்., நிறுவனத்தையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்தை தாண்டும். வி.ஆர்.எஸ்., திட்டத்துக்கு ஊழியர்கள் காட்டியுள்ள ஆதரவு, இதுவரை இல்லாதது. மொத்தம், 94 ஆயிரம் ஊழியர்கள், வி.ஆர்.எஸ்., பெற விருப்பம் தெரிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்துக்கு, மத்திய அரசு, 69 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. அதன் பின், இரு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, அதன் சொத்துகளை விற்று, மூன்றாண்டுகளில், லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


வாடிக்கையாளர் சேவையில் தமிழ் மொழிக்கு, 'பெப்பே!'


'பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை அழைத்தால், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே பேச முடிகிறது; தமிழில் பேசும் வசதி நீக்கப்பட்டு உள்ளது' என, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., சேவையில் குறைபாடு உள்ளதாக, சமீப காலமாக, வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். உதாரணமாக, வாடிக்கையாளர் சேவைக்கான உதவி எண்ணிற்கு அழைத்தால், தமிழில் பேச முடிவதில்லை.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்.,லில் அடிக்கடி சிக்னல் பிரச்னை ஏற்படுகிறது. பி.எஸ்.என்.எல்., மொபைல் எண்களை தொடர்பு கொண்டால், 'நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர், தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்' என்றே அடிக்கடி கூறப்படுகிறது. மேலும், 1503, 1800 180 1503 ஆகிய வாடிக்கையாளர் சேவைக்கான உதவி எண்களை தொடர்பு கொண்டால், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தகவல் கிடைக்கிறது. தமிழ் மொழி அதில் இடம் பெறவில்லை; ஏற்கனவே நடைமுறையில் இருந்த, தமிழில் பேசும் வசதி நீக்கப்பட்டுள்ளது. இதனால், சேவை தொடர்பான பிரச்னைகளை தெரிவிக்க முடியாமல், தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ரூ. 7,000 கோடி சேமிப்பு:


வி.ஆர்.எஸ்., திட்டம் பற்றி, பி.எஸ்.என்.எல்., தலைவர் பி.கே.புர்வார் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் பணியாற்றும், 1.5 லட்சம் ஊழியர்களில், ஒரு லட்சம் பேர், வி.ஆர்.எஸ்., பெற தகுதியானவர்கள். வி.ஆர்.எஸ்., திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினால், ஆண்டுக்கு, சம்பள செலவில் மட்டும், 7,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

நஷ்ட ஈடு எவ்வளவு?


விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்கள், அவர்கள், பணியாற்றிய ஒவ்வோர் ஆண்டுக்கும், தலா, 35 நாள் சம்பளம் வழங்கப்படும். பணி முதிர்வு முடியும் வரை, மீதியுள்ள ஆண்டுகளுக்கு, தலா, 25 நாள் சம்பளம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை