அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ராமஜென்ம பூமி

தினமலர்  தினமலர்
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ராமஜென்ம பூமி

அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி விவகாரம், மத்தியில் தற்போது ஆளும் பா.ஜ.,வுக்கு, 1996 முதலே, ஒவ்வொரு லோக்சபா தேர்தலின் போதும் முக்கிய பிரச்னையாக அமைந்திருந்தது. மேலும், ஒவ்வொரு தேர்தலிலும், இந்தப் பிரச்னையை முன்வைத்து செய்த பிரசாரங்களால், அந்தக் கட்சி படிப்படியாக வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது.

'அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்' என, பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி உருவாக்கிய இயக்கம், 'கோவில் கட்ட வேண்டும்' என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் முடிந்துள்ளது.

பிரசாரம்:


இந்த இடைப்பட்ட காலங்களில், இந்த விவகாரம், பா.ஜ.,வுக்கு தேர்தல்களில் மிகப் பெரிய உதவியை செய்துள்ளது. கடந்த, 1980களின் இறுதியில் மற்றும் 1990களின் துவக்கத்தில், ஒரு சிறிய கட்சி என்ற நிலையில் இருந்து, மிகவும் முக்கியமான கட்சியாக பா.ஜ., உருவெடுக்க ராமர் கோவில் உதவியுள்ளது. கடந்த, இரண்டு தேர்தல்களில் தான், இந்தப் பிரச்னையை முன் வைக்காமல், பிரதமர் நரேந்திர மோடி வேறு அம்சங்களை குறிப்பிட்டு பிரசாரம் செய்து வென்று உள்ளார். ஆனாலும், பா.ஜ.,வின் நாடி நரம்பெல்லாம் விரிந்து பரவியுள்ளது, ராமர் கோவில் விவகாரம்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று, 19ம் நுாற்றாண்டிலேயே பேசப்பட்டது. ஆனால், அது ஒரு இயக்கமாக மாறியது, 1980களில்தான். கடந்த, 1980ல், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் இணைந்து பா.ஜ.,வை துவங்கினர். கடந்த, 1984ல் காங்.,கைச் சேர்ந்த பிரதமர் இந்திரா படுகொலைக்குப் பிறகு நடந்த தேர்தலில், பா.ஜ., போட்டியிட்டது.


சாதனை:


ஆனால், வாஜ்பாய் மற்றும் அத்வானி மட்டும் வென்றனர். அந்தக் கட்சியின் ஓட்டு சதவீதம், ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. அந்தத் தேர்தலில், 415 தொகுதிகளில், 48 சதவீத ஓட்டுகளுடன், காங்., வென்ற சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. கடந்த, 1989ல் நடந்த தேர்தலில், பா.ஜ., 85 தொகுதிகளில் வென்றது. வி.பி.சிங் தலைமையிலான, தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த வி.பி.சிங் முயன்றதால், கூட்டணியில் இருந்து பா.ஜ., வெளியேறியது.

அந்த நேரத்தில் தான், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, அத்வானி, ரத யாத்திரை மேற்கொண்டார். அது பெரிய இயக்கமாக மாறியது. மண்டல் கமிஷன் பிரச்னையைவிட, ராமர் கோவில் பிரச்னையே நாடு முழுவதும் விவாதிக்கப் பட்டது. கடந்த, 1992, டிச., 6ல், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கரசேவகர்கள், அயோத்தியில் கூடினர். அப்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன்பிறகு, பா.ஜ.,வின் வளர்ச்சி வேகமாக இருந்தது. கடந்த, 1996ல் நடந்த தேர்தலில், 161 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக பா.ஜ., உயர்ந்தது. ஆனால், பார்லிமென்டில் பலத்தை நிரூபிக்க முடியாமல், வாஜ்பாய் தலைமையிலான அரசு, 13 நாட்களில் கவிழ்ந்தது.

பெரும்பான்மை:


அதன் பிறகு, 1999ல் நடந்த தேர்தலில், 182 இடங்களில் வென்று, பா.ஜ., மீண்டும் தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. வாஜ்பாய் தலைமையிலான அரசு, முழு பதவிக்காலத்தை நிறைவு செய்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை பா.ஜ.,வால் எழுப்ப முடியவில்லை. கடந்த, 2004 மற்றும் 2009ல் நடந்த தேர்தல்களில், காங்.,கிடம், பா.ஜ., தோல்வி அடைந்தது. ஆனாலும், அந்தத் தேர்தல்களிலும், அயோத்தி ராமர் கோவில் விவகாரமே, பா.ஜ.,வின் முக்கிய பிரசார பிரச்னையாக இருந்தது.

கடந்த, 2014ல், காங்.,குக்கு எதிரான மனநிலை நாடு முழுவதும் இருந்தது. அப்போது மோடி அலையால், பா.ஜ., அபாரமாக வென்று ஆட்சி அமைத்தது. இந்தாண்டு நடந்த தேர்தலிலும், மோடி அரசின் செயல்பாடுகள் குறித்தே முக்கியமான பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், ராமர் கோவில் என்பது, பா.ஜ.,வின் அரசியல் அடிநாதமாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில், பா.ஜ., மூத்த தலைவர்கள் அந்த விவகாரம் குறித்து விவாதித்தனர். தற்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, வழக்கு முடிந்தாலும், தேர்தல்களில், ராமர் கோவில் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது.

- நமது சிறப்பு நிருபர் -

மூலக்கதை