அயோத்தியில் பக்தர்கள் உற்சாகம்; அமைதி நிலவுவதால் மக்கள் நிம்மதி

தினமலர்  தினமலர்
அயோத்தியில் பக்தர்கள் உற்சாகம்; அமைதி நிலவுவதால் மக்கள் நிம்மதி

அயோத்தி: அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, தற்காலிக ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என, கோஷம் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அமைதியான சூழல் நிலவியதால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

பலத்த பாதுகாப்பு:

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து, நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில், நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னதாக, தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தவிர்க்க, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உ.பி., போலீசாருடன், 90 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆள் இல்லா உளவு விமானங்கள் மூலம், அயோத்தியில் கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அயோத்திக்கு உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

'ஜெய் ஸ்ரீராம்'

இந்நிலையில், 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததையொட்டி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ராமர் கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர். 'ஜெய் ஸ்ரீராம்' என, மகிழ்ச்சியுடன் கோஷம் எழுப்பினர்.

தரிசனத்துக்கு வந்திருந்த ரமேஷ் தாஸ் என்ற பக்தர் கூறுகையில், ''ஒரு வழியாக, 500 ஆண்டுகளாக நீடித்து வந்த அடிமைத்தனம் முடிவுக்கு வந்துள்ளது. இது போன்ற ஒரு தீர்ப்பு வரும் என, நான் எதிர்பார்க்கவில்லை. விரைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்க திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.

இதற்கிடையே, அயோத்தி முழுவதும் நேற்று அமைதியான சூழல் நிலவியது. மக்கள், வீடுகளுக்குள் முடங்கியிருந்தாலும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் திறந்துஇருந்தன. பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நடக்காததால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

அமைதி முக்கியம்: யோகி வலியுறுத்தல்

உத்தர பிரதேச மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத் கூறியதாவது: மக்கள் அமைதியாகவும், சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், வன்முறைக்கு இடம் கொடுத்து விடக் கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான், நம் பலம். அதை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

சமூக வலைதளங்கள் கண்காணிப்பு:

அயோத்தி தீர்ப்பை அடுத்து, விஷமிகள், சமூக வலைதளம் மூலம் வதந்தியை பரப்புவதை தடுக்கும் வகையில், போதிய கண்காணிப்பு நடவடிக்கைகளை உ.பி., மாநில அரசு மேற்கொண்டுள்ளது. தலைநகர் லக்னோவில், 'அவசரநிலை மையங்கள்' ஏற்படுத்தப்பட்டு, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் போலீசார் மூலம், சமூக வலைதள பதிவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, மண்டல வாரியாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், 24 மணி நேரமும், பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியாக, உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

நவம்பர், 9ல் தீர்ப்பு ஏன்?

அயோத்தி வழக்கின் தீர்ப்பு, நேற்று, வழங்கப்பட்டதற்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவ., 17ல் பணி ஓய்வு பெறுகிறார். அன்று ஞாயிற்று கிழமை. பொது விடுமுறை நாளில் முக்கிய வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. இதனால், நவ., 13 முதல் 15க்குள், தீர்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. நேற்று இரண்டாவது சனிக்கிழமை என்பதால் பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை தினம். இதனால், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் இந்த நாள் தேர்வு செய்யப்பட்டது.

கொண்டாட்டம் வேண்டாம்!

பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னைக்கு, அமைதியான முறையில் தீர்வு ஏற்பட்டுள்ளதற்காக, அனைவருக்கும் வாழ்த்துகள். ஆனால், கொண்டாட்டங்களில் ஈடுபடுவது, மற்றவர்களை அவமதிப்பது போன்ற நடவடிக்கைகளை, அனைவரும் தவிர்க்க வேண்டும்.
- அனுல் கே ஷா, கலெக்டர், அயோத்தி மாவட்டம்

மூலக்கதை