சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி: முஸ்லிம்களுக்கு மாற்று இடம்: சுப்ரீம்கோர்ட் பெஞ்ச் பரபரப்பு தீர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி: முஸ்லிம்களுக்கு மாற்று இடம்: சுப்ரீம்கோர்ட் பெஞ்ச் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது. அங்கு ராமர் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மாற்று இடமாக வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று காலை அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலத்திற்கு சன்னி வஃக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இதுதொடர்பாக முதலில் பல ஆண்டுகளாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. கடந்த 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலத்தை மேற்கண்ட மூன்று அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.

ஆனால், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி உச்சநீதிமன்றத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தன.

கிட்டதிட்ட 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டது.

இதற்கிடையே, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக்பூஷண், அப்துல் நசிர் ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு ஏற்பாட்டின்படி, சமரச பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ‘வாழும் கலை’’ அமைப்பாளர் ரவிசங்கர், மூத்த வக்கீல் ராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இவர்கள் மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழு இந்து, முஸ்லிம் அமைப்புகளை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

கிட்டதிட்ட 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காததால், மத்தியஸ்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதனால், அயோத்தி மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.

கடந்த ஆக. 6ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்.

16ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17ம் தேதி பணி ஓய்வு பெறவுள்ளதால், அதற்குள் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்க்கப்பட்டது.

அதன்படி, நாளை காலை 10. 30 மணிக்கு (நவ. 9) தீர்ப்பு வெளியாக உள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நாடுமுழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக சட்டம் ஒழுங்கை தொடர்ந்து கண்காணிக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் ஏற்கனவே உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது.

அதனால், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மாவட்டத்தில் டிச. 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தலைமை நீதிபதியே உத்தரப்பிரேதச தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல், புலனாய்வு பணியகத்தின் (ஐபி) தலைவர் அரவிந்த்குமார் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அயோத்தி தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அயோத்தி வழக்கு தொடர்பாக, தலைமை நீதிபதியின் அறைக்கு, சீல் செய்யப்பட்ட கவரில் இருந்த தீர்ப்பின் நகல்கள் எடுத்து செல்லப்பட்டன. இரு தரப்பிலிருந்தும் வக்கீல்கள் முன் வரிசையில் தங்கள் இடங்களில் அமர்ந்தனர்.

தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகளும் நீதிமன்ற அறைக்கு காலை 10. 30 மணிக்கு வந்தனர். 5 நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்புகளை எழுதினர்.

5 பேர் சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார்.

அதன் விபரம் வருமாறு:
 
* அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் பாபர் மசூதி மீது உரிமை கோரி, ஷியா வக்ஃப் வாரியத்தின் மனு ஏகமனதாக தள்ளுபடி செய்யப்படுகிறது.

* சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோகி அகாராவின் மனுவில் ஆதாரங்கள் ஏதும் இல்லை.

நிர்மோகி அகாராவின் வழக்கில், சர்ச்சைக்குரிய இடத்தின் மேலாளர் என்பதையும் நிராகரிக்கப்படுகிறது.

* ஒரு மதத்தினரின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்க கூடாது.

நீதிமன்றம் நடுநிலையை காக்கும் பொறுப்பில் உள்ளது. தொல்லியல் துறையின் ஆராய்ச்சி முடிவுகளையும் ஒதுக்கிவிட இயலாது.



* பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. அதற்கு முன்பே அந்த இடத்தில் இஸ்லாமிய முறையில் கட்டப்படாத கட்டிடம் ஒன்று இருந்திருக்கிறது.

மத நம்பிக்கையானது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது.



* ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. அதேபோன்று அதே இடத்தை பாபர் மசூதி என்று இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள்.



* 1857ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்துக்கள் இந்த கட்டிடத்துக்குள் சென்று வழிபட தடை ஏதும் இருந்திருக்கவில்லை.
 
* அலகாபாத் உயர்நீதிமன்றம் நிலத்தை மூன்றாக பிரித்து 3 தரப்பினருக்கும் தர வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பு தவறானது.

* 3 மாத காலத்தில் வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தினை மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்க வேண்டும்.

* சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தமானது.

சர்சக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதை முஸ்லிம்கள் நிரூபக்கவில்லை.

*. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம்.

ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அதில், உறுப்பினர்களாக நிர்மோகி அகரா தரப்பினரையும் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு

அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வழங்குவதற்கு  1 மணி நேரத்திற்கு முன்பாக பஞ்சாப் முதலமைச்சர் அம்ரேந்தர் சிங் சட்டம் ஒழுங்கு குறித்து மாவட்ட உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் சூழ்நிலையை கட்டுக்குள் வைத்திருக்க எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

57 நிமிடத்துக்கு முன்: ராஜஸ்தான்: ஜெய்சல்மர் மாவட்ட மாஜிஸ்திரேட் சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

52வது நிமிடம்: அயோத்தி தீர்ப்பு வருவதையடுத்து அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை விடுத்தார்.

46வது நிமிடம்: அயோத்தி வழக்கு தொடுத்தவர்கள் தீர்ப்பை வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தள்ளது.

41வது நிமிடம்: அயோத்தி தீர்ப்பு வருவதை முன்னிட்டு இதுவரை சுமார் 10 ஆயிரம் முறை  மாநில அளவிலான அதிகாரிகள் மற்றும் மத தலைவர் களுடன் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பக்கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

37வது நிமிடம்: அயோத்தி பகுதி முழுவதும் அதிரடிபடையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதுடன், வான்வழி கண்காணிப்பு, அதிரடி சோதனை ஏற்பாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

34வது நிமிடம்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 24 மணி நேரத்துக்கு இணைய தள சேவைகள் காலை 10 மணிமுதல் முடக்கப்பட்டன.

29வது நிமிடம்: தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் திரண்டனர்.

15வது நிமிடம்: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.



1வது நிமிடம்: நீதிமன்றத்துக்கு சீலிடப்பட்ட உறையில் தீர்ப்பு நகல் கொண்டு வரப்பட்டது.

சரியாக 10. 30 மணிக்கு ரஞ்சன் கோகாய் அயோத்தி வழக்கில் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

ஷியா பிரிவு, நிர்மோகி மனு தள்ளுபடி

1936ம் ஆண்டு முதல் பாபர் மசூதியை பராமரிக்கும் பொறுப்பு உபி வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஷியா மற்றும் சன்னி பிரிவினர் மசூதியை ெசாந்தம் கொண்டாடினர்.

குறிப்பாக சன்னி பிரிவினர் இந்த மசூதி தங்களுக்கு சொந்தம் என்று தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கில் பாபர் சன்னி பிரிவை சேர்ந்தவர் என்று 1944 பிப்ரவரி 24ம் தேதி அரசாணையில் உத்தரவிடப்பட்டது.

1945ல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து தான் ஷியா பிரிவினர் உபி மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை நீதிபதி எஸ். ஏ. ஆசன் விசாரித்து, பாபர் மசூதி சன்னி பிரிவுக்கே சொந்தமானது என்று தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து, ஷியா பிரிவினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவும் அயோத்தி வழக்கில் தொடரப்பட்ட மற்ற மனுக்களுடன் இணைத்து விசாரிக்கப்பட்டது.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட போது ஷியா பிரிவின் மனுவை தள்ளுபடி செய்வதாக 5 நீதிபதிகள் இன்று அறிவித்தனர்.
நிர்மோகி அகாரா என்ற தரப்பினர், ராமரை தங்களுடைய கடவுள் என்று கூறி வருகின்றனர். இந்தப் பிரிவினர் உபி உள்பட 6 மாநிலங்களில் உள்ளனர்.

அயோத்தி சர்ச்சை தொடர்பாக 1989ல் உத்திரப்பிரதேச அரசிடம் மனு கொடுத்தனர். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோதும் மனு தாக்கல் செய்தனர்.

அதில், சர்ச்சைக்குரிய நிலம் தங்களுக்கு சொந்தம் என்று கூறியிருந்தனர். அதைத் தொடர்ந்து தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம், ‘‘சர்ச்சைக்குறிய 2. 77 ஏக்கர் நிலத்தை 3 பகுதியாக பிரித்து வழங்கியதில், நிர்மோகி அகாரா தரப்புக்கும் ஒரு பகுதி சொந்தம்’’ என்று தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவு திருப்தி அளிக்கவில்லை என்று நிர்மோகி அகாரா தரப்பும் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சுப்ரீம்கோர்ட் எதிர்கொண்ட 8 சிக்கலான கேள்விகள்

கடந்த 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம், ராம ஜென்மபூமி - பாபர் மசூதி நில பிரச்னை வழக்கில், பகவான் ராம்லல்லா விரஜ்மான், நிர்மோஹி அகாரா மற்றும் உத்தரபிரதேச சன்னி மத்திய வஃப் வாரியம் ஆகியோருக்கு இடையே சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பாகங்களாக பிரிக்க உத்தரவிட்டது.

சிக்கலான இந்த வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வு முன்பாக, 30க்கும் மேற்பட்ட கேள்விகளை உள்ளடக்கிய எட்டு முக்கிய வினாக்கள் எழுப்பப்பட்டன.
தீர்ப்பு வெளியான நிலையில், மேல் முறையீடாக உச்சநீதிமன்ற சென்ற பின்பும்கூட, இருதரப்பினரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் எஸ். ஏ. போப்டே, டி. ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு முன்பாக, ஏற்கனவே வைக்கப்பட்ட அதே 8 சிக்கல்கள் குறித்தே வாதிட்டனர்.

அதன்விவரம் வருமாறு:

கேள்வி எண்: 1:
கடந்த 1989ம் ஆண்டில் இந்து தரப்பினர், குறிப்பாக ராம் விரஜ்மான் உரிமை கோரியதில் காலக்கெடு இருந்ததா?
இந்து தரப்பு:
பகவான் ராம்லல்லா விரஜ்மான் தரப்பில் உரிமை கோரி தாக்கல் செய்ததில் காலக்கெடு இல்லை என்பதை உயர் நீதிமன்றம் கண்டறிந்து ஆதரித்தது. அப்போது, அவர்கள், நிர்மோஹி அகாரா மற்றும் உத்தரப்பிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் தங்கள் கோரிக்கைகளை தாக்கல் செய்வதில் தாமதம் செய்தது.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உடைமையைப் பெற உரிமை இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியது சரியானது.
முஸ்லிம் தரப்பு:
கோயில் இருந்ததாக கூறப்படும் இடத்தின் மையக் குவிமாடத்தின் கீழ் சிலைகள் காணப்பட்டபோது, உரிமை கோரி தாக்கல் செய்வதற்கு 12 ஆண்டு காலக்கெடு தொடங்கியது. உரிமை கோரி 1961 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது.

உயர் நீதிமன்றம் கூறியதுபோல ஆறு ஆண்டுகள் அல்ல; 1950ம் ஆண்டில் முதல் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோது கால வரையறை பொருந்தும் என்று உயர் நீதிமன்றம் முடிவு செய்தது.

கேள்வி எண்: 2
கடந்த 1885ல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கானது, இந்த நிலப் பிரச்னை கேள்விக்கு தீர்வு காணுமா?
இந்து தரப்பு:
அயோத்தியில் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் நிலத்தில் மசூதி கட்டப்பட்டதாக பைசாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் 1886ல் உரிமையியல் வழக்கில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், கோயில் கட்ட அனுமதி வழங்கவில்லை; இது தவறு என்றால், முஸ்லிம் தரப்பினர் ஆவணத்தை காட்ட வேண்டும்.
முஸ்லிம் தரப்பு:
1885ன் வழக்கு இந்த பிரச்னையில் தீர்வு காணப்பட்ட சட்டமாக ஒப்புக் கொள்ள முடியாது.

ஏனெனில் இது ஒரு பகுதியை மட்டுமே கையாண்டுள்ளது. வெளி முற்றத்தில் உள்ள சபுத்ரா மற்றும் அடுத்தடுத்த உரிமை கோரல்கள் முழு சர்ச்சைக்குரிய இடத்தையும் உள்ளடக்கியது.

கேள்வி எண்: 3
கட்டிடம் எப்போது யாரால் கட்டப்பட்டது? யார் நிலத்தை வைத்திருந்தனர்?
இந்து தரப்பு:
சர்ச்சைக்குரிய கட்டிடம் 1528ம் ஆண்டில் பாபரால் கட்டப்பட்டது.

இருப்பினும் ஜென்மபூமி தெய்வீகமானது. அங்கே ஒரு சிலைகூட இல்லை என்றாலும் அது தெய்வம்தான்.

அதனால், நிலம் எப்போதும் இந்துக்களுக்கு சொந்தமானது. வளாகத்தில் உள்ள ஒரு மசூதி அதனுடைய தெய்வீகத் தன்மையை மாற்றாது.

ஜென்மபூமியை சட்டப்பூர்வ இடமாக கருத முடியுமா என்பதை நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும்.
முஸ்லிம் தரப்பு:
1528ல் மசூதி கட்டப்பட்டது முதல் முஸ்லிம்கள் இப்பகுதியை வைத்திருந்தனர். 1989 வரை இந்துக்களால் இந்த நிலம் ஒருபோதும் உரிமை கோரவில்லை.

நிலத்தை அவர்கள் வைத்திருந்தால், 1934ல் நடந்த கலவரத்தில் மசூதியின் ஒரு குவிமாடம் ஏன் வீழ்த்தப்பட்டது? அவர்களுக்கு ஏற்கெனவே உரிமை இருந்திருந்தால், 1949ல் லைகளை நிறுவ ஏன் அத்துமீறப்பட்டது? என்று வாதிடப்பட்டது.

கேள்வி எண்: 4
ஒரு பழங்கால இந்து கோயிலின் இடத்தில் மசூதி கட்டப்பட்டதா?
இந்து தரப்பு:
பாபர் மசூதி நிலத்தில் கி. மு. 2ம் நூற்றாண்டில் இருந்தே ஒரு பெரிய கட்டமைப்பு இருந்தது.

அது காலியான இடமோ அல்லது விவசாய நிலமோ அல்ல என்று இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் தரப்பு:
தொல்லியல் துறையின் அறிக்கை என்பது சிறந்த நிபுணர்களின் கருத்தாக எடுத்து, இவ்வழக்கை தீர்மானிக்க ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

அதில் முரண்பாடுகள் உள்ளன. அதனால், நீதிமன்றம் அதை ஆதாரமாக ஏற்கக் கூடாது.

இந்து தரப்பினரால் நம்பப்பட்ட நிலப்பகுதியையும், புத்தகங்களையும் சரிபார்க்கப்பட்ட வரலாற்றுக் நிகழ்வுகளாக கருத முடியாது.

கேள்வி எண்: 5
சிலைகள், வழிபாட்டுப் பொருட்கள் 1949 டிசம்பர் 22, 23ம் தேதிகளில் இரவு நேரத்தில் வைக்கப்பட்டதா அல்லது அவை ஏற்கெனவே இருந்ததா?
இந்து தரப்பு:
1949ல் சிலைகள் மத்திய குவிமாடத்தின் கீழ் வைக்கப்பட்டதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அவை முன்பே இருந்தன.


நீதிபதி பூஷண்:
1935க்கு முன்னரே சிலைகளும் கர்ப்ப கிரகமும் இருந்துள்ளது. குறிப்பிட்ட தனிநபர்களின் வாய்மொழி ஆதாரம் குறிப்பிடுகிறது.


முஸ்லிம் தரப்பு:
சிலைகளை மத்திய குவிமாடத்தின் கீழ் வைப்பது ஒரு திட்டமிட்ட மறைமுகமான தாக்குதல் மற்றும் அத்துமீறல்.

கேள்வி எண்: 6
வெளிப்புற முற்றத்தில் ராம் சபுத்ரா, பந்தர் மற்றும் சீதா ரசோய் சிலைகள் இருந்ததா?
இந்து தரப்பு:
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பில் 3 நீதிபதிகளும் 1855க்கு முன்னர் ராம் சபுத்ரா, பந்தர் மற்றும் சீதா ரசோய் சிலைகள் இருந்ததாக ஒப்புக் கொண்டனர்.
முஸ்லிம் தரப்பு:
1949ம் ஆண்டுக்கு முன்னர் ராம் சபுத்ரா, இந்து தெய்வங்களின் சிலைகள் இருந்தன என்பதை முஸ்லிம் தரப்பு ஒப்புக்கொள்கிறது.

ஆனால், இந்துக்கள் அந்த இடத்தின் மீது உரிமை கொண்டிருக்கவில்லை. பிரார்த்தனை செய்ய மட்டுமே உரிமை உண்டு.

கேள்வி எண்: 7
நிலம் யாரிடம் இருந்தது; சொத்துப் பத்திரம் யார் வைத்திருந்தார்கள்?
இந்து தரப்பு:
சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலம் மட்டுமல்லாமல், அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலமும் இந்து தரப்பு உரிமை உள்ளது.

கடவுளின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் கடவுளுக்கு எதிர்மறையான உரிமைகோரல்களை தாக்கல் செய்ததால், நிர்மோஹி அகாரா தானாகவே உரிமையை இழந்துவிட்டது.
முஸ்லிம் தரப்பு:
உத்தரபிரதேச சன்னி மத்திய வஃப் வாரியம், 1989ம் ஆண்டு ராம்லல்லா விரஜ்மான் தெய்வத்தின் சார்பாக 1989ல் சிறப்பு உரிமையாளர்கள் உரிமை கோரப்படும் வரை, நிர்மோஹி அகாராவும், வஃப் வாரியமும்தான் அந்த இடத்தின் உண்மையான சட்டப்பூர்வ ஒரே உரிமையாளர்கள். ‘ஷெர்மிட்’ உரிமைகள் பத்திரத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படையில் நிர்மோஹி அகாராவின் உரிமைப் பத்திரம் ஏற்க முடியாது.

அகாராவுக்கு கடமைகளும் உரிமைகளும் இல்லை. முஸ்லிம் தரப்பு அவர்கள் பிரச்னை செய்த பகுதிக்கு மட்டுமே உரிமை கோரியது.

ஆனால், நிலத்தை கையகப்படுத்தவில்லை. 1992 டிச.

6ம் தேதி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் அங்கே மசூதி இருந்ததால், அதை மீட்டெடுக்க எங்களுக்கு உரிமை உண்டு.

கேள்வி எண்: 8
பாபர் மசூதி முறையான மசூதியாக இருக்கிறதா?
இந்து தரப்பு:
மசூதியின் தூண்களில் தேவநாகரி எழுத்தில் கல்வெட்டுகள் காணப்பட்டதாக தொல்லியல் துறை அறிக்கைகள் மேற்கோள் காட்டுகின்றன.

இஸ்லாத்தின் கொள்கைகளின்படி இந்த அமைப்பு சரியான மசூதி அல்ல; தொழுகை நடத்தப்படும் எல்லா இடத்தையும் மசூதியாக கருத முடியாது; ஆனால், மசூதியில் தொழுகை நடத்தப்பட்டதாக முஸ்லிம் தரப்பினர் கூறியுள்ளனர்.
முஸ்லிம் தரப்பு:
சர்ச்சைக்குரிய கட்டிடம் கட்டப்பட்ட நாளிலிருந்து அது ஒரு மசூதியாக உள்ளது. 1934ம் ஆண்டு கலவரங்களுக்குப் பிறகும் நமாஸ் செய்யப்பட்டது.

மசூதி தொழுகைக்கு ஒரு இமாம் தலைமை தாங்கினார். ஒரு முஸ்ஸின் அஸான் ஓதினார்.

இருப்பினும், மசூதியை நிர்மாணிப்பதை இறையியலின் அடிப்படையில் கேள்வி கேட்க முடியாது. ஆனால், வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் கேள்வி கேட்கலாம்.

மேற்கண்ட 8 கேள்விகளுக்கான விடையை, இன்றைய தீர்ப்பில் விரிவாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரி விடுமுறை

உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி பகுதியில் மட்டுமில்லாது நாடு முழுவதுமே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியமாக அயோத்தி பகுதி தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 4,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பாதுகாப்பு கருதி ஜம்முவிலும் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்முவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற திங்கட்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

144 தடையில் நீதிமன்ற வளாகம்

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பைத் தெரிந்து கொள்வதற்கு ஒட்டுமொத்த நாடும் நேற்றிரவு முதல் எதிர்பார்ப்புடன் காத்திருந்தது.

முன்னதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு, காலை 10. 30 மணியளவில் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியாவதை ஒட்டி, நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ். ஏ. பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் ஆகியோருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அதேபோல், அவர்களின் குடியிருப்புக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற வளாகத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



இணைய வசதிகள் முடக்கம்

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி மாவட்டத்திற்கு இணையதள சேவை 24 மணி நேரத்துக்கு தடை செய்யப்பட்டது. அலிகார் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இணையதள சேவை நிறுத்தப்பட்டது.

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டது. மேலும், லக்னோ, அலிகார், ஆக்ரா, மொராதாபாத், வாரணாசி, கோரக்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாரத்ப்பூர் மாவட்டத்திலும், இன்று காலை 6 மணி முதல் நாளை வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களை பொருத்தளவில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஒரே மாநிலமாக பாஜ ஆளும் கர்நாடகா விளங்குகிறது.

பிற தென் மாநிலங்களில் வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டன.

அரிதான சனிக்கிழமை தீர்ப்பு

கடந்த ஆக.

6ம் தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெற்று வந்தது. அக்.

16ம் தேதி விசாரணையை முடித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக, நேற்றிரவு உச்சநீதிமன்றம் அறிவித்தது.

பொதுவாக சனிக்கிழமைகளில் நீதிமன்றத் தீர்ப்பு என்பது வழங்கப்படாது. அது மிகவும் அரிது.

ஆனால் முக்கிய வழக்குகள் அல்லது அவசர வழக்குகளில் மட்டுமே விடுமுறை நாட்களில் தீர்ப்பு அல்லது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று வெளியான 70 ஆண்டு கால அயோத்தி வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இன்று சனிக்கிழமையாக இருந்தாலும் இன்றைய தினமே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

.

மூலக்கதை