சித்தூர் அருகே விபத்து: கன்டெய்னர் லாரி அடியில் சிக்கி 11 பேர் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சித்தூர் அருகே விபத்து: கன்டெய்னர் லாரி அடியில் சிக்கி 11 பேர் பரிதாப பலி

திருமலை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து விஜயவாடா நோக்கி தனியார் நிறுவன வாட்டர் பாட்டில்களுடன் நேற்று மாலை கன்டெய்னர் லாரி புறப்பட்டது. லாரியை டிரைவர் அட்சய்(26), ஓட்டினார்.

உடன் கிளீனராக ராஜேஷ்(27) என்பவர் வந்தார். சித்தூர் மாவட்டம் பலமனேர் அடுத்த மொகிலி மலைப்பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது.

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் சடன் பிரேக் போட முயன்றார்.
ஆனால் பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய லாரி, எதிர்திசையில் பாய்ந்து அவ்வழியே வந்த ஷேர் ஆட்டோ, மினிவேன், பைக் மீது அடுத்தடுத்து மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மினிவேன், பைக்கில் சென்றவர்கள் கன்டெய்னர் லாரியின் அடியில் சிக்கினர்.

தகவலறிந்த பலமனேர் மற்றும் பங்காருபாளையம் போலீசார் அங்கு வந்து பொதுமக்களுடன் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ராட்சத கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை அகற்றினர்.

அப்போது லாரியின் அடியில் மினிவேன் மற்றும் ஒரு பைக் நசுங்கி கிடந்தது. அதில் பயணம் செய்த அனைவரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

இந்த விபத்தில் மினிவேனில் பயணம் செய்த ராஜசேகர யாதவ்(69) மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த ராமச்சந்திரா(50), ராமு(38), சரஸ்வதி(49), பிரமிளா(37), குர்ரம்மா(52), சுப்பிரமணியம்(49), சேகர்(45), பாப்பம்மா(49) ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர். இவர்கள் 9 பேரும் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று மினிவேனில் ஊருக்கு திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.

அதேபோல், பைக்கில் வந்த நரேந்திரா(49) என்பவரும் உடல் நசுங்கி இறந்தார்.

இந்த விபத்தில் மொத்தம் 10 பேர் பலியாகினர். ஆனால் லாரி மோதிய வேகத்தில் ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி ெசன்று தூரத்தில் கவிழ்ந்ததால் அதில் வந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதையடுத்து படுகாயம் அடைந்த லாரி கிளீனர் ராஜேஷ் மதனப்பல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து காரணமாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பலமனேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசின் திட்டத்தின் கீழ் தலா ₹7 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையில் தலைமறைவானதாக கூறப்பட்ட லாரி டிரைவர் அட்சய் இன்று காலை கவிழ்ந்த லாரியின் அடியில் நசுங்கி கிடந்த வாட்டர் பாட்டில்களுக்கு மத்தியில் சடலமாக மீட்கப்பட்டார். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

விபத்து நடந்தது எப்படி?

விபத்து குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிளீனர் ராஜேஷ் கூறுகையில், மொகிலி மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கியபோது சாலை பள்ளம் என்பதால் வாகனங்கள் தானாக வேகமாக இறங்கும்.

இதனால் டிரைவர் அட்சய் டீசலை மிச்சம் பிடிக்க இன்ஜினை ஆப் செய்தார். அப்போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை.

இன்ஜின் ஆப் செய்யப்பட்டதால் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் டிரைவர் அட்சய் போனில் லாரிக்கு பிரேக் பிடிக்கவில்லை எனக்கூறினார்.

பின்னர் என்னை வேகமாக குதித்துவிடு எனக்கூறி அவர் குதித்துவிட்டார். ஆனால் அவர் கூறியதை நான் விளையாட்டாக கருதி உள்ளேயே இருந்தேன்.

அதற்குள் லாரி தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் நான் படுகாயம் அடைந்தேன் என்றார்.

.

மூலக்கதை