அயோத்தி நில வழக்கு தீர்ப்பை முன்னிட்டு கோவையில் போலீஸ் உடல் தகுதி தேர்வு ஒத்திவைப்பு: 5,800 போலீசார் பாதுகாப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அயோத்தி நில வழக்கு தீர்ப்பை முன்னிட்டு கோவையில் போலீஸ் உடல் தகுதி தேர்வு ஒத்திவைப்பு: 5,800 போலீசார் பாதுகாப்பு

கோவை: அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று இரவு முதல் அலர்ட் செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு கோவை நகரில் இன்று காலை முதல் 2800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ரயில் நிலையத்தில் டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான போலீசார் ரயில் பயணிகள் மற்றும் அவர்களின் பொருட்களை சோதனை செய்து அனுப்பிவருகின்றனர். காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், பதட்டம் நிறைந்த பகுதிகளாக கருதப்படும் வின்சென்ட் ரோடு, உக்கடம், ஆத்துப்பாலம், கரும்புக்கடை, குறிச்சி, போத்தனூர், சுந்தராபுரம், செல்வபுரம், மரக்கடை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகனங்களில் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவினாசி சாலை, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கோவை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த போலீஸ் உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை