நாக்பூரில் நாளை கடைசி டி.20 போட்டி தொடரை வெல்லுமா இந்தியா?.. மல்லுகட்ட காத்திருக்கும் வங்கதேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாக்பூரில் நாளை கடைசி டி.20 போட்டி தொடரை வெல்லுமா இந்தியா?.. மல்லுகட்ட காத்திருக்கும் வங்கதேசம்

நாக்பூர்: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் டி. 20தொடரில் டெல்லியில் நடந்த முதல் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடந்த 2வது டி. 20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. இந்நிலையில் தொடரை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி. 20போட்டி நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா, அதில் இருந்து மீண்டு 2வது போட்டியில் வென்றுள்ளது வீரர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கேப்டன் ரோகித்சர்மா-தவான் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 118 ரன்கள் குவித்து அசத்தினர்.

அதிரடி காட்டிய ரோகித் 85 ரன்கள் விளாசினார்.

பந்து வீச்சில் சஹால், வாஷிங்டன்சுந்தர் எதிரணியை கட்டுப்படுத்தினர். ரிஷப் பன்ட் கீப்பிங்கில் சொதப்பினாலும் அவர் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது.

இதனால் ஆடும் லெவனில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. நாளைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது.

மறுபுறம் டெல்லியில் நடந்த போட்டியில் வெற்றியுடன் தொடங்கிய வங்கதேசம் 2வது போட்டியில் சொதப்பல் பேட்டிங்கால் தோல்வி அடைந்தது. சாகிப் அல்ஹசன், தமீம் இல்லாத நிலையில் முஷ்பிகுர் ரகிம், சவுமியா சர்க்கார், கேப்டன் மகமதுல்லாவையே பேட்டிங்கில் பெரிதும் நம்பி உள்ளது.

பந்துவீச்சில் அமினுல்இஸ்லாம் 2 போட்டியில் 4 விக்கெட் எடுத்துள்ளார். ராஜ்கோட்டில் அடைந்த தோல்வியில் இருந்து தவறுகளை சரிசெய்து தொடரை வெல்லும் நம்பிக்கையில் வங்கதேசம் உள்ளது.

கோஹ்லியைவிட ரோகித் சூப்பர்
 
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறியிருப்பதாவது:  என்னால் சிறப்பாக விளையாட முடியும் போது, ஏன் உங்களால் முடியாது, என சச்சின் மற்றவர்களிடம் சொல்வார்.

ஆனால், கடவுள் ஒருவர் மட்டுமே என்பதை புரிந்து கொள்ள மாட்டார். கடவுள் செய்வதை மற்றவர்களால் செய்ய முடியாது.

இதுபோலத் தான் ரோகித் சர்மா. இவரும் சச்சின் போன்றவர்.

இப்போது ரோகித்சர்மா என்ன செய்கிறாரோ, அதை கோஹ்லியால் கூட செய்ய முடியாது. ஒரே ஓவரில் 3 அல்லது 4 சிக்சர்கள் அடிப்பது அல்லது 45 பந்தில் 80 முதல் 90 ரன்கள் வரை எடுப்பது அவருக்கு கைவந்த கலை.

அவர் எப்போதும் இப்படித் தான் ரன்கள் குவித்து வருகிறார். கோஹ்லியிடம் இதுபோன்ற ஆட்டத்திறனை பார்த்தது இல்லை.


நாக்பூரில் இதுவரை. . .

நாக்பூர் மைதானத்தில் இதுவரை 11 சர்வதேச டி. 20 போட்டிகள் நடந்துள்ளன.

இதில் இந்தியா  3 போட்டிகளில் விளையாடி 2ல் தோல்வி, ஒரு வெற்றி பெற்றுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 29 ரன் வித்தியாசத்திலும், 2016ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 47 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.

கடைசியாக இங்கிலாந்துடன் 2017ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி நடந்த போட்டியில் 5 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
* வங்கதேசம்-இந்தியா இதுவரை 9 டி. 20 போட்டிகளில் மோதி உள்ளன.

இதில் 8ல் இந்தியாவும், ஒரு போட்டியில் வங்கதேசமும் வென்றுள்ளன. நாளை 10வது முறையாக இரு அணிகளும் மோதுகின்றன.


.

மூலக்கதை