எப்ப சார் முடிப்பீங்க ?அணைப்பாளையம் பாலம் கட்டுமான பணி

தினமலர்  தினமலர்
எப்ப சார் முடிப்பீங்க ?அணைப்பாளையம் பாலம் கட்டுமான பணி

திருப்பூர்:காலேஜ் ரோடு, அணைப்பாளையம் பகுதியில் பாலம் பணி தாமதத்தால் ஏற்படும் அவதிக்கு தீர்வு காணக் கோரி, மறியலுக்கு முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் காலேஜ் ரோடு, அணைப்பாளையம் பகுதியில், நொய்யல் ஆறு மற்றும் ரயில்வே பாதையைக் கடந்து செல்லும் வகையில், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. காலேஜ் ரோட்டில் சிறுபூலுவப்பட்டி ரிங் ரோட்டில் சென்று சேரும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடக்கிறது.
இதற்காக காலேஜ் ரோடு-ரிங் ரோடு இணையும் பகுதியில், கட்டுமானப் பணிக்காக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், கட்டுமானப் பணி துவங்கியது முதல் இவ்வழியாக வாகனங்கள் செல்ல வழியின்றி, சுற்றி வளைத்து செல்கின்றன.பாலம் கட்டுமான பணி, பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், ஆவேசமடைந்த, மாநகராட்சி 14வது வார்டு, ஜீவா நகர் பகுதி பொதுமக்கள் இதற்கு தீர்வு காணக்கோரி, சாலை மறியல் நடத்த திரண்டனர்.தகவல் அறிந்து மாநகராட்சி உதவி பொறியாளர் சுகுமார், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.
திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரிடம், அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.பொதுமக்கள் கூறியதாவது:கொசு உற்பத்திக்கு தனியார் வீடுகள், நிறுவனங்களில் நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி நிர்வாகம், அணைப்பாளையம் ரயில்வே பாலம் அருகே தேங்கிக் கிடக்கும் கழிவு நீர் அகற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
கொசு உற்பத்தி, தொற்று நோய் அபாயம் உள்ளது.மழை பெய்தால் ரோட்டுக்கும் குட்டைக்கும் வேறுபாடு தெரிவதில்லை. ஆபத்தான நிலை உள்ளது. குட்டையை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.பாலம் கட்டுமிடத்தில் அகற்றிய மின் கம்பங்கள் ரோட்டில் போட்டுக் கிடக்கிறது. கட்டடப் பணிக்கு அமைத்த தொட்டி அகற்றாமல் உள்ளது.
இவை குறித்து பல முறை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எப்போதுதான் பாலத்தை கட்டி முடிப்பீர்கள்? இவ்வாறு, அவர்கள் சரமாரியாக குற்றம் சுமத்தினர்.மக்கள் கூறிய கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மூலக்கதை