கோப்பை வென்றது ஆஸ்திரேலியா | நவம்பர் 08, 2019

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது ஆஸ்திரேலியா | நவம்பர் 08, 2019

பெர்த்: பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் கேப்டன் ஆரோன் பின்ச் அரைசதம் கடந்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2–0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1–0 என, முன்னிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி பெர்த்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆஸம் (6), முகமது ரிஸ்வான் (0) ஏமாற்றினர். இமாம்–உல்–ஹக் (14), ஹரிஸ் சோகைல் (8), குஷ்தில் ஷா (8), இமாத் வாசிம் (6), ஷதாப் கான் (1) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இப்திகார் அகமது (45) ஆறுதல் தந்தார்.

பாகிஸ்தான் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்தது. முகமது ஆமிர் (9), முகமது ஹஸ்னைன் (4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன் 3, ஸ்டார்க், சீன் அபாட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின்ச் விளாசல்: சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய பின்ச் அரைசதம் கடந்தார். முகமது முசா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பின்ச் வெற்றியை உறுதி செய்தார்.

ஆஸ்திரேலிய அணி 11.5 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 109 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பின்ச் (52), வார்னர் (48) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சீன் அபாட் (ஆஸ்திரேலியா) வென்றார். தொடர் நாயகன் விருதை ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) கைப்பற்றினார்.

மூலக்கதை