அ.தி.மு.க., கூட்டணி வெற்றி அடுத்த தேர்தலிலும் தொடரும்: முதல்வர்

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க., கூட்டணி வெற்றி அடுத்த தேர்தலிலும் தொடரும்: முதல்வர்

விக்கிரவாண்டி : ''அ.தி.மு.க. கூட்டணி தான் உள்ளாட்சி தேர்தலிலும் 2021 சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெறும்'' என முதல்வர் பழனிசாமி பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வெற்றி பெற்றதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் விக்கிரவாண்டியில் நேற்று மாலை நடந்தது.

இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எம்.பி. தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடத்தில் கூறி வெற்றி பெற்றார். இதை உணர்ந்த மக்கள் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய 'அல்வா'வை கொடுத்துவிட்டனர்.பலர் 2021 தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வரப் போவதாக கூறி வருகின்றனர்.

68 ஆண்டு காலம் வேறு தொழிலில் இருந்து விட்டு அரசியலிலும் தொழில் போல் வரலாம் என நினைக்கின்றனர்.அ.தி.மு.க. கூட்டணி தான் உள்ளாட்சி தேர்தலிலும் 2021 சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெறும். அ.தி.மு.க.வில் வெற்றிடம் நிலவுவதாக கூறினர். ஆனால் இந்த இடைத்தேர்தல் வெற்றி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அ.தி.மு.க.வில் வெற்றிடம் இல்லை என்ற நிலையை உருவாக்கி மக்கள் நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ஸ்டாலினுக்கு தி.மு.க. தலைவர் பதவியை அவரது தந்தை கருணாநிதியே கொடுக்க முன் வராத போது தமிழக மக்கள் எப்படி ஆட்சியை ஸ்டாலினிடம் கொடுப்பார்கள். தந்தையே நம்பாத மகனை நம் மக்கள் எப்படி நம்புவார்கள். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

மூலக்கதை