தீர்ப்பை மதித்து ஏற்க வேண்டும்: அனைத்து மதத்தினர்

தினமலர்  தினமலர்
தீர்ப்பை மதித்து ஏற்க வேண்டும்: அனைத்து மதத்தினர்

லக்னோ: 'அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை உ.பி. மக்கள் அனைவரும் மதித்து ஏற்க வேண்டும்' என அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உ.பி. மாநிலம் லக்னோவில் அயோத்தி வழக்கில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க சர்வமத கூட்டம் நடந்தது. அப்போது அயோத்தி தீர்ப்பை அனைவரும் மதித்து ஏற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக லக்னோவின் ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள ஹனுமான் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சர்வேஷ் சுக்லா ''நம் நாட்டு மக்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் முதிர்ச்சியடைந்தவர்கள். அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.


லக்னோ இமாம் ஈத்கா மவுலானா காலித் ரஷீத் பிராங்கி மகாலி ''மத உணர்வுகளுக்கு அடிமையாகாமல் தங்கள் குடும்பம், நகரம், மாநிலம், நாடு ஆகியவற்றின் வளர்ச்சி பற்றி மக்கள் பேச வேண்டும்'' என்றார்.

லக்னோ மறை மாவட்ட தலைவர் டொனால்டு டி சவுசா ''அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை ஒரு மனதாக ஏற்க வேண்டும். அதுதான் புனிதமான செயல்'' என்றார்.

மூலக்கதை