மஹா., முதல்வர் ராஜினாமா: ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு

தினமலர்  தினமலர்
மஹா., முதல்வர் ராஜினாமா: ஜனாதிபதி ஆட்சிக்கு வாய்ப்பு

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவிக்காலம் இன்றுடன்(நவ.,9) முடிவடையும் நிலையில், தேவேந்திர பட்னவிஸ், நேற்று, தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மஹாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. பதவியை ராஜினாமா செய்த பட்னவிஸ், கூட்டணி கட்சியான சிவசேனா மீது, சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கூட்டணியான, பா.ஜ., - சிவசேனா, அதிக தொகுதி களில் வெற்றி பெற்றும், கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு ஒதுக்கும்படியும், அமைச்சரவையில், 50 சதவீத ஒதுக்கீடு அளிக்கும்படி யும், சிவசேனா தலைவர்கள் பிடிவாதம் செய்தனர்.

சிவசேனா முயற்சி


பா.ஜ., தலைவர்கள் கடுமையாக முயற்சித்தும், சுமுக முடிவை எட்ட முடியவில்லை. இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க, சிவசேனா முயற்சித்தது. ஆனால், தேசியவாத காங்கிரஸ், இதற்கு சம்மதிக்க மறுத்து விட்டது. மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், மஹாராஷ்டிரா முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ், நேற்று, மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்த அவர், தன் பதவியை ராஜினாமா செய்து, கடிதம் அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்ற கவர்னர், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் வரை, இடைக்கால முதல்வராக நீடிக்கும்படி, பட்னவிசிடம் வலியுறுத்தினார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் பட்னவிஸ் கூறியதாவது: கவர்னரின் அடுத்த கட்ட நடவடிக்கை, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புதிய அரசு அமைக்க, எந்த கட்சிக்காவது அழைப்பு விடுக்கலாம் அல்லது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம். கடந்த ஐந்தாண்டுகளாக எனக்கும், பா.ஜ., அரசுக்கும் ஆதரவு அளித்த மஹாராஷ்டிரா மக்களுக்கும், சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் நன்றி.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு சிவசேனா தான் காரணம். முதல்வர் பதவியை சுழற்சி முறையில் ஒதுக்குவதாக, தேர்தலுக்கு முன் நடந்த பேச்சில், சிவசேனா தலைவர்களுக்கு எந்த வாக்குறுதியையும், பா.ஜ., அளிக்கவில்லை. கொடுக்காத வாக்குறுதியை எப்படி நிறைவேற்ற முடியும். பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை, போன் மூலம், பலமுறை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவர், அழைப்பை ஏற்கவில்லை.

பிரதமர் மோடியையும், பா.ஜ., தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவையும், சிவசேனா தலைவர்கள் கடுமையாக விமர்சித்தது, மிகவும் மன வேதனை அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

கவர்னர் அழைப்பு


இதையடுத்து, 'மஹாராஷ்டிராவில், சட்டசபையை முடக்கி வைத்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம்' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, தேசிய வாத காங்., தலைவர் சரத் பவார் கூறுகையில், ''அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில், ஆட்சி அமைக்கும்படி, பா.ஜ.,வுக்கு, கவர்னர் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். ''அவர், அதை ஏன் செய்ய வில்லை என, ஆச்சரியமாக உள்ளது,'' என்றார்.

மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அதவாலே, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை நேற்று சந்தித்து பேசியதும், பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.,வைச் சேர்ந்த அமைச்சர்கள், தாவ்டே, பவன்குலே ஆகியோர், மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட, இவர்களுக்கு, 'சீட்' மறுக்கப்பட்ட நிலையில், நிதின் கட்கரியை, இருவரும் சந்தித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

முத்திரை குத்துவதா?


தற்காலிக முதல்வர் பட்னவிஸ் பேட்டி கொடுத்ததை, 'டிவி'யில் பார்த்தேன். சுழற்சி முறையில் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு ஒதுக்குவதாக, சட்டசபை தேர்தலுக்கு முன், அமித் ஷா தலைமையில் உறுதி அளிக்கப்பட்டது; இப்போது இல்லை என்கின்றனர். இதன்மூலம், என்னை பொய்யர் என, முத்திரை குத்த முயற்சிக்கின்றனர். இதனால் தான், பா.ஜ., தலைவர்களுடன் பேசுவதை நிறுத்தினேன். முதல்வர் பதவி வேண்டும் என்பதில், இப்போதும் உறுதியாக உள்ளோம்.

-உத்தவ் தாக்கரே, தலைவர் - சிவசேனா

ஆட்சி அமைக்க வாழ்த்து!


சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, ஆட்சி அமைப்பதற்கான உரிமை, அந்த கட்சிக்கு உள்ளது. தனக்கு நம்பிக்கை இருந்தால், முதல்வர் பட்னவிஸ், மீண்டும் பா.ஜ., ஆட்சியை அமைக்கட்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள். பா.ஜ., ஆட்சி அமைக்க தவறும் பட்சத்தில், நாங்கள் ஆட்சி அமைக்க தயாராக உள்ளோம்.

-சஞ்சய் ராவத், மூத்த தலைவர், சிவசேனா

காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜஸ்தானுக்கு ஓட்டம்?


குதிரை பேர அரசியல் நடக்கலாம் என்பதால், சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்களை, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்று பாதுகாக்க, அந்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்களுக்கு, 25 லிருந்து, 50 கோடி ரூபாய் வரை தருவதாக, பா.ஜ., தலைவர்கள் பேரம் பேசி வருகின்றனர்' என்றார். இதை, பா.ஜ., தரப்பு மறுத்துள்ளது.

மூலக்கதை