சாமியார்கள் போர்வையில் பாகிஸ்தான் உளவாளிகள்

தினமலர்  தினமலர்
சாமியார்கள் போர்வையில் பாகிஸ்தான் உளவாளிகள்

புதுடில்லி : 'பாகிஸ்தான் உளவுத்துறையினர், ஆன்மிக குரு, சாமியார்கள் மற்றும் பெண்கள் போர்வையில், சமூக ஊடகங்களில் உலவுகிறார்கள். 'இது போன்ற, 150 போலி கணக்குகள் மூலம், ராணுவ ரகசியங்களை பெற, தீவிர முயற்சிகள் நடப்பதால், நம் வீரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ரகசிய தகவல்கள்:

இந்திய ராணுவத்தின் முக்கிய பிரிவுகளில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களை குறி வைத்து, முக்கிய தகவல்களைப் பெற, பாக்., உளவுத்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பாக்., உளவுத்துறையை சேர்ந்தவர்கள், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிக் டாக், யூ டியூப்' போன்ற சமூக ஊடகங்களில், ஆன்மிக குரு, சாமியார்கள் மற்றும் பெண்கள் போர்வையில், போலி கணக்குகளை துவக்குகின்றனர்.

அதன் மூலம், இந்திய ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நட்பாக பழகி, ஆசை காட்டி மயக்கி, முக்கிய ரகசிய தகவல்களை பெறுகின்றனர். ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள், சமூக ஊடகங்கள் வழியாக, பாக்.,கை சேர்ந்த பெண்ணிடம், சில ரகசிய தகவல்களை பகிர்ந்தது, சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.

எச்சரிக்கை:

இதையடுத்தே, நம் ராணுவம், வீரர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதில், வீரர்கள், சீருடையுடன் உள்ள தங்கள் புகைப்படங்களை, சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், முன் பின் தெரியாத பெண்களிடம், சமூக ஊடகம் வாயிலாக நெருங்கிப் பழக வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 'இது போல, 150 போலி கணக்குகள் உலா வருவதால், நம் வீரர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்' என, ராணுவ தலைமையகம் எச்சரித்துள்ளது.

மூலக்கதை