காவிக்கு நான் சிக்க மாட்டேன்: ரஜினி திட்டவட்டம்

தினமலர்  தினமலர்
காவிக்கு நான் சிக்க மாட்டேன்: ரஜினி திட்டவட்டம்

சென்னை: ''காவிக்கு, திருவள்ளுவரும் சிக்க மாட்டார்; நானும் சிக்க மாட்டேன்,'' என, நடிகர் ரஜினி கூறினார்.

சென்னையில், நடிகர் ரஜினி அளித்த பேட்டி: திருவள்ளுவர் ஞானி; சித்தர். அவர் நாத்திகர் அல்ல; ஆத்திகர். கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதை, யாரும் மறுக்க முடியாது. ஞானி, சித்தர்களை, எந்த மதம் மற்றும் ஜாதிக்குள்ளும் அடக்க முடியாது. இதற்கெல்லாம், அவர் மாட்ட மாட்டார். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது, பா.ஜ.,வின் தனிப்பட்ட விருப்பம். அவர்களின் அலுவலகத்தில் அதை செய்தனர். ஊரில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு எல்லாம் காவி பூச வேண்டும் என, அவர்கள் சொல்லவில்லை. இதை பெரிய சர்ச்சையாக்குவது, மிகவும் கேவலமாக உள்ளது.

நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் நிறைய உள்ளன. எனக்கு திரைத் துறையில், சாதனையாளர் விருது வழங்கியதற்கு நன்றி. அயோத்தி தீர்ப்பு எப்படி வந்தாலும், மக்கள் அமைதி காக்க வேண்டும். குழந்தைகள் நலன் தொடர்பான அமைப்பு துவக்குவது குறித்து, முதல்வரை சந்தித்து பேசவே, என் மனைவி சென்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலில், நாங்கள் போட்டியிட மாட்டோம். பா.ஜ.,வில் இருந்து, யாரும் என்னை அழைக்கவில்லை. திருவள்ளுவர் மீது காவி பூசியது போல, என் மீதும் காவி பூச, சிலர் முயற்சிக்கின்றனர். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்; நானும் மாட்ட மாட்டேன்.

தங்கள் கட்சியில் சேர வேண்டும் என, என்னை யார் வேண்டுமானாலும் அழைக்கலாம். அரசியலில், இது சகஜம். அதுபற்றி முடிவு எடுக்க வேண்டியது, நான் தான். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'மிசா'வில் கைது செய்யப்பட்டது குறித்து, எனக்கு தெரியாது; தெரியாமல் எதையும் பேச மாட்டேன். பொருளாதார மந்த நிலையை போக்க நடவடிக்கை தேவை. அதை, அரசு நிச்சயம் செய்யும். தமிழகத்தில், சரியான ஆளுமைமிக்க தலைமைக்கு, இன்னும் வெற்றிடம் உள்ளது. அரசியல் கட்சி தொடங்கினாலும் தொடர்ந்து நடிப்பேன். எம்.ஜி.ஆர்., கூட கட்சி துவக்கி, முதல்வராகும் வரை தொடர்ந்து நடித்தார். இவ்வாறு, ரஜினி கூறினார்.

மூலக்கதை