'மிசா விவகாரத்தில் 2 நாட்களில் பதில்'

தினமலர்  தினமலர்
மிசா விவகாரத்தில் 2 நாட்களில் பதில்

சென்னை: ''மிசா சட்டத்தின் கீழ், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து, சந்தேகம் கிளப்பினேன். இது தொடர்பாக, தி.மு.க., தரப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு, இரண்டு நாட்களில், உரிய சான்றுகளுடன் பதில் அளிக்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, வீரமாமுனிவர் சிலைக்கு, அவரது பிறந்த நாளையொட்டி, அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். அதன்பின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: அ.தி.மு.க.,வில், வழிகாட்டி குழு அமைக்கும் பணி நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும், அறிவிப்பு வெளியாகலாம். உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., ஜகா வாங்குகிறது. நாங்கள் பெரும் வெற்றி பெறுவோம்.

தி.மு.க., கூட்டணி, 'கப்சிப்' என்று உள்ளது. தி.மு.க., பலவீனமாகி விட்டது. பொது வாழ்க்கையில் குற்றச்சாட்டு கூறினால், அதற்கு பதில் கூற வேண்டும். அதற்கு மாறாக, பஞ்சமி நிலம் குறித்து பதில் அளிக்காமல், ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கிறார். குற்றச்சாட்டு உண்மையில்லை என, தி.மு.க., நிரூபிக்க வேண்டும். அதேபோல், மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விபரம், இஸ்மாயில் கமிஷனிலும் இல்லை; ஷா கமிஷனிலும் இல்லை. இரா.செழியன், மிசா கால கொடுமைகள் குறித்து எழுதிய புத்தகத்திலும், இவர் கைது செய்யப்பட்டதற்கான குறிப்பு இல்லை.

என்ன காரணத்திற்காக, அவர் சிறை சென்றார் என்பதை, அவர் தான் கூற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது: தி.மு.க., கூறும் ஒவ்வொரு விஷயத்துக்கும், இரண்டு நாட்களில் பதில் அளிக்கப்படும். அனைத்து சான்றுகளுடன் பதில் இருக்கும். அந்த பிரச்னைக்கு முடிவு காண, ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார். எனவே, அது குறித்து பேசவில்லை. ஆனால், அவர்கள் கேட்ட கேள்வி களுக்கு, பதில் அளிக்கப்படும்.

மிசாவில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணத்தில், ஸ்டாலின் பெயர் இருந்தால், அதை அவர் காண்பித்திருக்கலாம். அவரது தியாக வரலாற்றில், 23 வயதில், மிசாவில் அடிபட்டார்; ஜனநாயகத்தை காக்க தியாகம் செய்ததாக கூறுகின்றனர். அதில், சில கேள்விகள் எழுந்துள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை