2 ஆயிரம் கோடி ஐ.எம்.ஏ நிதி நிறுவன மோசடி 9 அரசு அதிகாரிகள் வீடுகளில் சோதனை : பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின

தினகரன்  தினகரன்
2 ஆயிரம் கோடி ஐ.எம்.ஏ நிதி நிறுவன மோசடி 9 அரசு அதிகாரிகள் வீடுகளில் சோதனை : பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின

பெங்களூரு : ஐ.எம்.ஏ நகைக்கடை மற்றும் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக  கர்நாடகத்தை சேர்ந்த  9 அரசு உயர் அதிகாரிகளுக்கு சொந்தமான 15 இடங்களில்  சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பெங்களூரு  சிவாஜிநகர் பகுதியில் செயல்பட்டு வந்தது ஐ.எம்.ஏ நகைக்கடை மற்றும் நிதி  நிறுவனம். இதன் உரிமையாளர் மன்சூர். இவர் பெங்களூரு மட்டுமின்றி வெளி  மாநிலம், வெளி நாட்டை சேர்ந்தவர்களிடம் கூடுதல் வட்டி தொகை தருவதாக கூறி,  தனது நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி கூறினார். இதை நம்பி சுமார் 40  ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ரூ.1 லட்சம் முதல் பல கோடி ரூபாய் வரை பணத்தை  முதலீடு செய்தனர். மன்சூர்கான் வாடிக்கையாளர்களை ஏமாற்றிவிட்டு, துபாய்க்கு தப்பியோடி விட்டார். இது  தொடர்பாக வழக்கு பதிவு செய்த சி.சி.பி போலீசார் மன்சூர்கானின் நகைக்கடை,  நிதி நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தியது மட்டுமின்றி, நிறுவனத்தின்  இயக்குனர்கள், உதவியாளர்கள், முதலீட்டாளர்கள், பினாமிகள் என்று பலரை கைது  செய்தனர். பாஜ அரசு இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைத்தது. சி.பி.ஐ  அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மன்சூர்கானை கைது செய்தனர். நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்ட அவர் பல நாட்கள் சி.பி.ஐ காவலில் எடுக்கப்பட்டார்.  அப்போது அவர் கொடுத்த தகவலில், அரசியல் பிரமுகர்களுக்கு  இந்த மோசடியில்  தொடர்பு இருப்பது மட்டுமின்றி, அதற்கு சாதகமான ஆதாரங்களை போலீசார்  அழித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். இதையடுத்து உயர் சி.பி.ஐ  அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைத்த அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்ட  ஐ.பி.எஸ் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்காணித்தனர். அதில் கிடைத்த  முறையான தகவலின் பேரில் நேற்று கர்நாடக மாநிலம் மண்டியா, மைசூரு, பெலகாவி,  பெங்களூரு மட்டுமின்றி உத்தரபிரதேச மாநில ஐ.பி்.எஸ் அதிகாரி என 9 அரசு  அதிகாரிகளுக்கு சொந்தமான 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.இவர்கள்  அனைவரும் ஐ.எம்.ஏ நிதி நிறுவனம் தொடங்கியபோது பெங்களூருவில் பணியாற்றி  வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் சி.ஐ.டி குற்றப்பிரிவு ஐ.ஜி.பி  ஹேமந்த் நிம்பாள்கர், சி.ஐ.டி டி.எஸ்.பி தர், பெங்களூரு கிழக்கு மண்டல  டி.சி.பி அஜய் கிலோரி, கமர்ஷியல் தெரு இன்ஸ்பெக்டர் எம்.ரமேஷ், உதவி  ஆய்வாளர் கவுரிசங்கர், பெங்களூரு வடக்கு டி.சி.பி மற்றும் கே.பி.ஐ.டி  அதிகாரி எல்.சி நாகராஜ், பெங்களூரு மாவட்ட கலெக்டர் விஜயசங்கர், பெங்களூரு  வடக்கு துணை மண்டல கணக்காளர் மஞ்சுநாத், பி.டி.ஏ தலைமை இன்ஜினியர் பி.டி  குமார் உள்பட 9 அரசு அதிகாரிகள் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. இதில்  டி.சி.பி அஜய் கிலோரிக்கு சொந்தமான வீடு உத்தரபிரதேச மாநிலத்தில்  இருப்பதால், சி.பி.ஐ தனிப்படையை சேர்ந்தவர்கள் அங்கும் சோதனை செய்துள்ளனர்.  ஒரே நேரத்தில் நடந்த இந்த சோதனை மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. இதில்  ஐ.எம்.ஏ நிறுவனம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் நிதி நிறுவனம் மூலம்  பெற்றப்பட்ட பொருட்கள் என பலதரப்பட்ட ஆதாரங்களை சி.பி.ஐ அதிகாரிகள்  கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை