டிக்டாக் மூலம் கள்ளக் காதல் மனைவியை கொன்றார் கணவர் : ஆந்திராவில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
டிக்டாக் மூலம் கள்ளக் காதல் மனைவியை கொன்றார் கணவர் : ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திராவில் டிக்டாக் வீடியோ பழக்கத்தில் கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட மனைவி அடித்து கொலை செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், தாலுறு  கிராமத்தை சேர்ந்தவர் சேத்பாஷா (40), டெய்லர். இவரது மனைவி பாத்திமா (34). இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பாத்திமா கடந்த சில மாதங்களாக டிக்டாக் வீடியோ பார்ப்பதிலும், விதவிதமான பாடல், சினிமா டயலாக்கிற்கு வீடியோ எடுத்து அதனை டிக்டாக்கில் பதிவு செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வந்தாராம். இதை சேத்பாஷா கண்டித்தும் அவர் இதை நிறுத்தவில்லையாம். தொடர்ந்து டிக்டாக் வீடியோவை பார்ப்பது, வீடியோ பதிவு செய்வது என தொடர்ந்து வந்தாராம். அப்போது டிக்டாக் வீடியோ மூலம் ஒரு நபருடன் பாத்திமாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த சேத்பாஷா பாத்திமாவை கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் பாத்திமா தனது கள்ளக்காதலனுடன் பழகி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரடைந்த சேத்பாஷா, அங்கிருந்த மரக்கட்டையால் மனைவி பாத்திமாவை சரமாரி தாக்கி, கழுத்தை கையால் நெரித்துள்ளார். இதில் பாத்திமா பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சேத்பாஷா தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார். பாத்திமாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கனிகிரி போலீசில் புகார் அளித்தனர்.இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சேத்பாஷாவை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் டிக்டாக் வீடியோ எடுக்க வேண்டாம் என மனைவிக்கு பலமுறை தெரிவித்தும், அவர் கைவிடாததால் பத்திமாவை கொலை செய்தது தெரியவந்தது.

மூலக்கதை