பல ஆண்டுகளாக உழைத்து இந்திய அரசியலில் பாஜ.வை ஆதிக்க சக்தியாக மாற்றியவர் : அத்வானி பிறந்தநாள் வாழ்த்தில் மோடி புகழாரம்

தினகரன்  தினகரன்
பல ஆண்டுகளாக உழைத்து இந்திய அரசியலில் பாஜ.வை ஆதிக்க சக்தியாக மாற்றியவர் : அத்வானி பிறந்தநாள் வாழ்த்தில் மோடி புகழாரம்

புதுடெல்லி: ‘‘பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து, இந்திய அரசியலில் பா.ஜவை ஆதிக்க சக்தியாக மாற்றியவர் அத்வானி,’’ என அவரது 92வது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். பா.ஜ மூத்த தலைவர் அத்வானி நேற்று தனது 92வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு டெல்லியில் உள்ள அத்வானி வீட்டுக்கு, பிரதமர் மோடி நேற்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். டிவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, அத்வானிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அறிஞர், அரசியல் மேதை, மிகவும் போற்றத்தக்க தலைவர்களில் ஒருவரான அத்வானியின் மிகச் சிறந்த பங்களிப்பை நாடு எப்போதும் போற்றும். பா.ஜ கட்சிக்கு உருவமும், வலிமையும் கொடுக்க பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்தவர் அத்வானி. இந்திய அரசியலில், பாஜ கட்சி ஆதிக்கம் செலுத்துவதற்கு, அத்வானி போன்ற தலைவர்கள்தான் காரணம். சுயநலமற்ற தொண்டர்களை அவர் பல ஆண்டுகளாக வளர்த்தார். கொள்கையில் அவர் ஒரு போதும் சமரசம் செய்ததில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அவர் முன்னணியில் இருந்தார். அமைச்சராக செயல்பட்டபோது அவரது நிர்வாக திறமைகள் பாராட்டக்கூடியது. இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், டிவிட்டரில் அத்வானியை பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், ‘அத்வானியின் அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு, நிர்வாகத் திறமை ஆகியவை பாஜ.வை தேசிய கட்சியாக மாற்றியது. நாட்டின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காவும், தனது முழு வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அத்வானியின் தலைமை பண்பு திகைக்க வைக்கும். அவர் கட்சிக்கு மட்டும் வலுவான அடித்தளம் அமைக்கவில்லை, லட்சக்கணக்கான தொண்டர்களையும் அவர் ஊக்குவித்தார். அமைச்சராக இருந்தபோது, இந்தியாவுக்கு புதிய உத்வேகம் கிடைக்க அவர் பணியாற்றினார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பா.ஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அத்வானியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மக்களுக்கு அதிகாரம் அளித்தது திருப்தி பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் என்ற முதலீட்டு நிர்வாக அமைப்பின் நிறுவனர் ரே டாலியோ என்பவர் பிரதமர் மோடியை பேட்டி எடுத்தார். தியானம், உலகம் மற்றும் இந்தியா என்பதை பற்றி இந்த பேட்டி அமைந்திருந்தது. இதை டிவிட்டரில் வெளியிட்ட ரே டாலியோ, உலகின் மிகச் சிறந்த தலைவர்களில் மோடியும் ஒருவர் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு டிவிட்டரில் பதில் அளித்த மோடி, ‘‘மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்ததுதான் எனது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் திருப்தி அளிக்கும் விஷயங்களில் ஒன்று. அதனால்தான் மாநிலம், மொழி, வயது வித்தியாசத்தை கடந்து எங்கள் அரசு மீண்டும் ஆட்சிக்குவர மக்கள் வாக்களித்தனர்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை