மருத்துவ காப்பீடு இனி வீணாகாது ஜிம்முவுக்கு போகலாம் யோகா செய்யலாம் : சலுகைகளை வாரி வழங்க ‘இர்டாய்’ உத்தரவு

தினகரன்  தினகரன்
மருத்துவ காப்பீடு இனி வீணாகாது ஜிம்முவுக்கு போகலாம் யோகா செய்யலாம் : சலுகைகளை வாரி வழங்க ‘இர்டாய்’ உத்தரவு

புதுடெல்லி: மருத்துவ காப்பீடு எடுத்தவர்களுக்கு, யோகா, உடற்பயிற்சி மையத்தில் சேரவும், புரத ஊட்டச்சத்து பொருட்கள் வாங்கவும் சலுகைகள் அளிக்கும்படி ‘காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்’ (இர்டாய்) விதிமுறைகளை வகுத்துள்ளது. மருத்துவ காப்பீடு எடுப்பவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது மட்டுமே, அதன் பயன்களை பெற்று வந்தனர். மற்றவர்களுக்கு மருத்துவ காப்பீட்டால் எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு தொகைக்கான சந்தா தொகையை மட்டும் செலுத்திவிட்டு, எந்த பயனும் அனுபவிக்காதவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களால் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு நல்ல லாபம். இந்நிலையில், இர்டாய் அமைப்பு மருத்துவ காப்பீடு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைளை வகுத்துள்ளது. அதன்படி, காப்பீடு நிறுவனங்கள் தங்கள் பாலிசிதாரர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தும் விதத்தில் பல விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, பாலிசிதாரர்களுக்கு யோகா மையம், உடற்பயிற்சி மையம் ஆகியவற்றில் சேரவும், புரத ஊட்டச்சத்து பொருட்கள் வாங்கவும் சலுகை கூப்பன்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கலாம். மருத்துவ காப்பீடு நிறுவனங்களின் குழு மருத்துவமனைகளில் பாலிசிதாரர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெறவும், மருந்துகள் பெறவும், உடல் பரிசோதனை மேற்கொள்ளும் சேவைகளையும் அளிக்க வேண்டும் என இர்டாய் விதிமுறைகள் வகுத்துள்ளது. இதனால், மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு விரைவில் பல சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை