நடிகர் பிரித்விராஜின் சொகுசு காரை பதிவு செய்ய மறுப்பு : விலையை குறைத்து காண்பித்ததால் அதிகாரிகள் அதிரடி

தினகரன்  தினகரன்
நடிகர் பிரித்விராஜின் சொகுசு காரை பதிவு செய்ய மறுப்பு : விலையை குறைத்து காண்பித்ததால் அதிகாரிகள் அதிரடி

திருவனந்தபுரம் : பிரபல  மலையாள நடிகர் பிரித்விராஜின் சொகுசு காரின் விலையை குறைத்து  காண்பித்ததால் அதை பதிவுசெய்ய மோட்டார் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்  மறுத்து விட்டனர். மலையாள சினிமாவில் முன்னணி  நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்விராஜ். இவர் அடிக்கடி புதிய சொகுசு  கார்களை வாங்குவது வழக்கம். புதுப்புது கார்களில் வலம்வருவதில்  பிரித்விராஜ்க்கு அதிக ஆர்வம் உண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்  பல கோடி ரூபாய் மதிப்பிலான ‘லம்போர்கினி’  காரை வாங்கினார். அதற்காக  அவர் கேரளாவில் செலுத்த வேண்டிய முழு வரியையும் செலுத்தினார்.இந்த  நிலையில் சமீபத்தில் இவர் ரூ.1.64 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கினார்.  அந்த காரை பதிவு செய்வதற்காக வாகன நிறுவனத்தினர் கொச்சி மோட்டார்  போக்குவரத்துத் துறையிடம் ஆன்-லைனில் பதிவு செய்தனர். அப்போது காரின் விலையை  குறைத்து ரூ.1.34 கோடி என குறிப்பிட்டிருந்தனர். ஆனால் உண்மையான மதிப்பு  ரூ.1.64 ேகாடி என்பது மோட்டார் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு  தெரியவந்தது.இதையடுத்து வாகனத்தை பதிவுசெய்ய மோட்டார்  போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். காரின் உண்மையான மதிப்பை  குறிப்பிட்டால் ரூ.9 லட்சம் கூடுதல் வரி செலுத்த வேண்டும். எனவே அந்த  காரின் உண்மை விலையை குறிப்பிட்டால் மட்டுமே அதை பதிவு செய்ய முடியும் என  மோட்டார் வாகன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை