அதிபர் டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம்

தினமலர்  தினமலர்
அதிபர் டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம்

வாஷிங்டன் : அறக்கட்டளை நிதியை, தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, 14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'டொனால்டு ஜே டிரம்ப் பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார். 2016ல் நடந்த அதிபர் தேர்தலில் போட்டி யிட்டபோது, அறக்கட்டளை நிதியை, தன் தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதாக, டிரம்ப் மீது புகார் கூறப்பட்டது.இது தொடர்பான வழக்கு, நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சேலியன் ஸ்கார்புலா அளித்த தீர்ப்பில் கூறியதாவது:அதிபர் டிரம்பின் அறக்கட்டளை, முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்கு நிதி திரட்டியுள்ளது.

அந்த நிதியை, டிரம்ப், தன் தேர்தல் செலவுகளுக்கு முறைகேடாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அவருக்கு, 14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அறக்கட்டளைகளை, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும்.மேலும், டிரம்ப் செலுத்தும் அபராத தொகை, அவருக்கு தொடர்பில்லாத, வேறு எட்டு அறக்கட்டளைகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.

மூலக்கதை