ஜம்மு-காஷ்மீர் எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவம்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீர் எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவம்: இந்திய ராணுவ வீரர் வீரமரணம்

பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீரமரணடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா காதி மண்டலத்தில் இந்திய ராணுவ துருப்புகள் முகாம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் எறிகணைகளை வீசியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலால் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள இந்திய ராணுவம், அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனால் இந்திய ராணுவம் அதை முறியடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை