பி.எஸ்.என்.எல் விருப்ப ஓய்வு திட்டத்தில் 2 நாளில் 22,000 பேர் விண்ணப்பம்

தினகரன்  தினகரன்
பி.எஸ்.என்.எல் விருப்ப ஓய்வு திட்டத்தில் 2 நாளில் 22,000 பேர் விண்ணப்பம்

புதுடெல்லி: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் சுமார் 22 ஆயிரம் பணியாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், தனது கடன் விகிதத்தினை குறைக்க பல்வேறு துரித நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதால்  பணியாளர்கள் ஓய்வு பெரும் திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்கிழமை அறிவித்தது.  1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில் 1 லட்சம் பேர் விருப்ப ஓய்வுபெற தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் இந்த விருப்ப ஓய்வூ திட்டம் வரும் டிசம்பர் 3ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இத்திட்டத்தின் மூலம், விருப்ப ஓய்வு பெற அறிவிக்கப்பட்ட 2 நாட்களில் 22 பணியாளர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 77 ஆயிரம் பேர் வரை விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்க வாய்ப்பிருப்பதாக உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விருப்ப ஓய்வு பணியாளர்களை அச்சுறுத்துவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கம் தெரிவித்ததாவது, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்வதை மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காமல் ஊழியர்களை வெளியில் அனுப்பும் திட்டத்தை இன்றைக்கு வெகு வேகமாக செயல்படுத்த முற்பட்டுள்ளார்கள். அதற்கு முன்னோடியாக ஊழியர்களை அச்சுறுத்தும் வகையிலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டில் பல மாதங்களாக சம்பளத்தை நிறுத்தி வைத்து தாமதம் செய்துள்ளனர். இதையடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தற்போது சுமார் 1.50 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில் ஆட்குறைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பள செலவை 7,000 கோடி ரூபாய் அளவுக்கு குறைக்க முடியும் என்றும் பி.எஸ்.என்.எல் தரப்பில் கூறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை