ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ஒப்பந்தம் : கமல்

தினமலர்  தினமலர்
ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ஒப்பந்தம் : கமல்

சென்னை: ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் மற்றும் திரையுலகில் அவரின் 60 ஆண்டு கொண்டாட்டமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று(நவ., 7) தனது சொந்த ஊரான பரமக்குடியில் அவரின் தந்தை சீனிவாசனின் சிலையை திறந்தார். தொடர்ந்து இன்று(நவ., 8) தனது சினிமா குருநாதரான கே.பாலசந்தரின் சிலையை தனது புதிய தயாரிப்பு அலுவலகத்தில் நிறுவி உள்ளார். இதனை நடிகர்கள் ரஜினியும், கமலும் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், 44 ஆண்டுக்கு பிறகு ஐகான் விருது கொடுக்கிறார்கள் ஆனால் சினிமாவுக்கு வந்த முதல் ஆண்டிலேயே ஐகான் ஆனவர் ரஜினி. இந்த விருது தாமதமான கவுரவம் என்றாலும் தக்க சமயத்தில் தான் கவுரவித்துள்ளனர். அவர் பாணி வேறு, என் பாணி வேறு என்பதை தவிர நாங்கள் இருவரும் நிறைய சிரமங்களை கடந்தே இங்கு வந்தோம்.

இருவரும் வேறு வேறு பாதையில் பயணிக்க முடிவெடுத்தபோது எங்களுக்குள் ஒப்பந்தங்கள் போட்டு கொண்டோம். ஒருவருக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என நானும், ரஜினியையும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். நாங்கள் யார் என்பதை புரிந்து வைத்துள்ளோம். எங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆனால் எங்களுக்கு நாங்கள் தான் முதல் ரசிகர்கள். அதேப்போன்று ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வோம், விமர்சிப்போம்.

சினிமாவை விட்டு விலகி விடுவதாக கூறிய ரஜினியை சத்தம் போட்டேன். நீங்கள் விலகினால் என்னையும் போகச் சொல்லி விடுவார்கள் என்றேன். தளபதி பட தலைப்பு என் காதில் கணபதி என கேட்டது. எங்களை பிரிக்க ஏதாவது சொல்வார்கள், நாங்கள் அதை காதில் போட்டுக் கொள்ள மாட்டோம். எங்களை யாராலும் பிரிக்க முடியவில்லை. விரைவில் ராஜ்கமலின் 50வது படம் பிரம்மாண்டமாய் துவங்கும். அதில் நான் நடிக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு கமல் கூறினார்.

மூலக்கதை