நகைச்சுவை கேலிக்கூத்தாகிவிட்டது: 'காத்தாடி' ராமமூர்த்தி ஆதங்கம்

தினமலர்  தினமலர்
நகைச்சுவை கேலிக்கூத்தாகிவிட்டது: காத்தாடி ராமமூர்த்தி ஆதங்கம்

மேடை நாடகங்களில் துவங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரை என, நகைச்சுவையில் தடம் பதித்தவர், நடிகர், 'காத்தாடி' ராமமூர்த்தி. நடிப்பு பிரதானமாக இருந்தாலும், ஓய்வு வயது வரை, தனியார் நிறுவனத்தில் கிளை மேலாளராகவும் பணியாற்றி, தற்போதும் கலைத்துறையின் மீது தீராத காதல் கொண்டிருக்கும் அவரிடம் உரையாடியதில் இருந்து...

நடிகர்களுக்கு அடைமொழி தேவையா?
எம்.கே.டி.பாகவதர், சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, தேங்காய் சீனிவாசன் போன்ற ஜாம்பவான்களுக்கு, அவர்களது பெயரை விட, அடைமொழியால் தான் பெருமை. அதுபோல எத்தனையோ ராமமூர்த்திகள் இருந்தாலும், 'காத்தாடி' ராமமூர்த்தி நான் மட்டும் தான். நடிகர்களுக்கு மட்டுமல்ல, மற்ற துறைகளில் உள்ளோருக்கும், மனதில் பதியும் விதமான அடைமொழி அவசியம்.

உங்கள் நாடகங்கள், எத்தனை முறை மேடை ஏற்றப்பட்டுஉள்ளது?
கடந்த, 1953ம் ஆண்டு, கல்லுாரி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 60களில், சோ குழுவில் இருந்தேன். 1966ல், சொந்த குழுவான, 'ஸ்டேஜ் கிரியேஷன்ஸ்' ஆரம்பித்து, 46 நாடகங்கள் போடப்பட்டுள்ளன. 7,500 முறை மேடை ஏற்றப்பட்டுள்ளது.

நாடக வளர்ச்சிக்கு நாடகத்துறை செய்ய வேண்டியது?
நாடகத்தின் வளர்ச்சி குறையவில்லை. பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை தான் குறைந்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள், நாடகங்களில் நடிக்க வருகின்றனர்; ஆனால், பார்க்க வருவதில்லை. அதற்கு காரணம், 'டிவி, மொபைல்போன்' உள்ளிட்ட நவீன வளர்ச்சியாக கூட இருக்கலாம். இன்றைய தலைமுறை, ஒருமுறை நாடகம் பார்க்க வந்தால், தொடர்ந்து வருவர் என்ற நம்பிக்கை உள்ளது. ஆன்மிகம், சரித்திரம் என்பது மாறி, தற்போது நகைச்சுவை நாடகங்கள் வருகின்றன.

நாடகத்தின் அடுத்த கட்டம் என்ன?
தற்போது மட்டுமல்ல, என்.எஸ்.கிருஷ்ணன் காலத்தில் இருந்தே, பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவை நாடகங்கள் அரங்கேறின. கிரேஸி, சேகர், நான் உட்பட, அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களை, நகைச்சுவை கலந்து வழங்கினோம். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால், மேடையில் திரைசீலைகள் அமைப்பது குறைந்து, எல்.ஈ.டி., 'டிவி' வாயிலாக, காட்சிகளை நேரடியாக மேடையில் காண்பிக்க முடிகிறது. நாடகத்தின் எதிர்காலத்தை கணிக்க முடியாது.

உங்களது, 'துப்பறியும் சாம்பு' போன்ற தொடர்களை, இணையதளங்களில் பார்க்க முடியுமா?
'துப்பறியும் சாம்பு' ஒரு காவியம், அதில், 40 கதாபாத்திரங்கள் வரும். எழுத்து வடிவில், பத்திரிகையில் தொடராக வந்தபோது, புதிதாக கதாபாத்திரங்களை, எந்த நேரத்திலும், கதையில் இணைக்கும் வசதி இருந்தது. ஆனால், நாடகத்தில் அதுபோன்று செய்ய முடியாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், அறிமுகம் தேவைப்படும். அதனால், குறிப்பிட்ட காலத்திற்குள், நாடகத்தை முடிக்க முடியாது. சமூக வலைதளங்களில், முழுமையாக நாடகங்கள் போட முடியாது. எதிர்காலத்தில், என்னை போன்று ஒருவரை வைத்து, துப்பறியும் சாம்பு நாடகம் நடத்தும் எண்ணம் உள்ளது.

உங்களுக்கு ஏற்பட்ட கேலி, அவமானம் குறித்து?
நடிகர்கள் ஒரு காலத்தில், 'கூத்தாடிகள்' என்று தான் அழைக்கப்பட்டனர். தொழில்முறை நாடக குழுக்கள் நலிவடைந்த நேரத்தில், எங்களை போன்ற தொழில் முறை அல்லாத, நாடக நடிகர்களால் தான், நாடகங்கள் சீரடைந்தன. நாடகங்களில் நடித்த பாத்திரங்களை வைத்து கிண்டல்கள் வரும். இதற்காக, வருத்தப்பட வேண்டியதில்லை. அதை நாம், நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் பணிபுரிந்தபடி எப்படி நடிக்க முடிந்தது?
நான், தனியார் நிறுவனத்தில், 36 ஆண்டுகள் பணிபுரிந்தேன். பணிபுரியும் போது, அலுவலக நேரத்தில், நாடக விஷயமாக யாராவது பேச வந்தால் கூட, மாலை பேசிக் கொள்ளலாம் என்பேன். அலுவலகத்தில், ஒழுங்காக பணிபுரிந்ததால் தான், ஓய்வு வயதை அடைந்த போது, ஓராண்டு பணி நீட்டிப்பு கிடைத்தது. நாடகம், அலுவலகம் இரண்டும், ரயில் தண்டவாளம் மாதிரி, ஒன்று சேராமல் சீராக கொண்டு செல்லும், வசதியும், பொறுமையும் இருந்ததால், என்னால் வாழ்க்கையில் உயர முடிந்தது.

அலுவலக பணி நாடகத்திற்கு இடைஞ்சலாக இருந்ததா?
எங்கள் அலுவலகத்தில், வாரத்தில், ஐந்து வேலை நாட்கள். நான், கிளை மேலாளராக இருந்ததால், நாடகத்திற்கு இடையூறு வராமல் இருக்க, சனி, ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகம் சென்று, வேலையை முடித்து விடுவேன். அந்த மனநிறைவில் தான், நாடக மேடை ஏறுவேன். அதனால் எனக்கு பிரச்னை வந்ததில்லை.

இன்றைய திரைப்பட காமெடி குறித்து உங்கள் கருத்து?
தற்போதைய சினிமாக்களை, நான் அதிகம் பார்ப்பதில்லை. தற்போது நகைச்சுவை கேலிக்கூத்தாக உள்ளது. 'டிவி'யில் கூட, பழைய படங்களை மட்டுமே பார்த்து வருகிறேன்.

பிடித்த காமெடி நடிகர் அன்று; இன்று?
என்றுமே, எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள், டி.ஆர்.ராமச்சந்திரன், டி.எஸ்.பாலையா. இருவரும் முகபாவங்கள் மற்றும் நடிப்பில், நகைச்சுவையை வழங்கியவர்கள்.

மக்கள் காத்தாடி மேல் கோபமாக இருக்கின்றனர். இதற்கு நீங்கள் தீர்வு சொன்னால் எப்படி இருக்கும்?
காத்தாடி மேல கோபம் இல்லை; அது கட்டப்பட்டுள்ள, மாஞ்சா மேல தான் கோபம். பல நாடுகளில், இன்றும் காத்தாடி போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த, 'காத்தாடி' மாஞ்சா இல்லாமல், நல்ல நுாலை கொண்டு பறந்து கொண்டிருக்கிறது.

81 வயதிலும், நாடகங்கள் நடத்தி வருகிறீர்கள்; மயிலாப்பூர் மாடவீதிகளில், இருசக்கர வாகனத்தில் பயணிக்கிறீர்கள்; எப்படி முடிகிறது?
வயது என்பது ஒரு கணக்கு தான்; மனசு தான் முக்கியம். சைக்கிளை விட, இரு சக்கர வாகனங்களில் கொஞ்சம் வேகமாக செல்ல முடிகிறது. மாடவீதிகள் மட்டுமின்றி, எங்கே சென்றாலும், இருசக்கர வாகனத்தில் தான் செல்கிறேன்.

தற்போது நடிக்கும் நாடகம்?
'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற கருத்தை, நகைச்சுவையுடன் சொல்லும், 'நன்றி மீண்டும் வாங்க' என்ற நாடகம், பல இடங்களில் நடக்க உள்ளது.

மூலக்கதை