கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன் ரஜினி

தினமலர்  தினமலர்
கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன் ரஜினி

அரசியல் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ரஜினி, செய்தியாளர்களை சந்தித்தார்.

திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி. சித்தர். ஞானிகள், சித்தர்களை மதம் ஜாதி எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவரது குறள் மூலம் தெரியும். அவர் நாத்திகர் அல்ல. ஆத்திகர். இதை யாரும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது.

திருவள்ளுவருக்கு பா.ஜ., காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விஷயம். ஊரில் நிறைய பிரச்னை இருக்கும் போது, இந்த விவகாரத்தை பற்றி பேசுவது அற்பத்தனமானது. தேவையற்றது. எனக்கு விருது அளித்தவர்களுக்கு நன்றி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜவில் சேரவோ, தலைவராக்கவோ இருக்கும்படி யாரும் அழைக்கவில்லை. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பது போல் எனக்கும் பூச முயற்சி நடக்கிறது. இதில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்டிக் கொள்ள மாட்டேன் என்றார்.

பின்னர் சற்றுநேரம் கழித்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, நான் எப்போதும் வெளிப்படையாக பேசுவேன். சிலர் மட்டுமே எனக்கு பா.ஜ., சாயம் பூச முயல்கின்றனர், அது நடக்காது. திருவள்ளுவருக்கு காவி உடையை பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில் மட்டும் போட்டது. வேறு எங்கும் போட வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், மீடியாக்கள் தான், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தின. என்னை ஒரு கட்சிக்கு வருமாறு அழைப்பது அவர்களின் விருப்பம்.

அயோத்தி விவகாரத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும், அனைவரும் அமைதி காக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டுமோ, அந்த பணியை மத்திய அரசு செய்ய வேண்டும். சினிமாவில் தொடர்ந்து கூட நடிப்பேன். அரசியல் கட்சி அறிவிக்கும் வரை நடிப்பேன். தமிழகத்தில் தலைமைக்கு இப்போதும் வெற்றிடம் உள்ளது என கூறினார்.

மூலக்கதை