இந்தியாவில் பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது: ராகுல் காந்தி ட்வீட்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது: ராகுல் காந்தி ட்வீட்

புதுடெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி போனது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து, லட்சக்கணக்கான சிறு தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பை பறித்த பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருந்தது. பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்காகவும், கருப்புப் பண புழக்கத்தை தடுப்பதற்காகவும், கள்ளநோட்டுகள் உருவாக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இந்த திடீர் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பல முடக்கப்பட்டன. பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புடன் கண்டனம் தெரிவித்தன. மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த இந்நாளை கறுப்பு நாளாக அனுசரிப்போம் என்று முடிவெடுத்தன. அதன்படி, இன்று #DeMonetisationDisaster, #BlackDay என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. மேலும், பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. \'பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை பேரழிவிற்குள்ளாக்கியது. பல உயிர்களை பழியாக்கியுள்ளது. லட்சக்கணக்கான சிறு வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வருடந்தோறும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. மொத்தத்தில் பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் இன்னும் நீதிக்கு முன்னாள் தண்டிக்கப்படவில்லை\' என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை