தேனி காதல் ஜோடி கொலை வழக்கு: குற்றவாளி திவாகருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தினகரன்  தினகரன்
தேனி காதல் ஜோடி கொலை வழக்கு: குற்றவாளி திவாகருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: தேனி மாவட்ட காதல் ஜோடி கொலை வழக்கு குற்றவாளி திவாகருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்தவர் தங்கநிதி. இவரது மகன் எழில் முதல்வன் (23). இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் முத்துத்தேவன் பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், இருவரும் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து கஸ்தூரியின் தந்தை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் நிர்வாண நிலையில் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் சுருளி அருவி அருகேயுள்ள காட்டுப் பகுதியில் சடலமாக கிடந்தனர். அவர்கள் எழில் முதல்வன், கஸ்தூரி ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திவாகர் மீது தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து திவாகர் தரப்பில் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திவாகருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கத்து உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை