அயோத்தி வழக்கின் தீர்ப்பால் நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு: உபி தலைமை செயலர், டிஜிபியுடன் ரஞ்சன் கோகாய் சிறப்பு ஆலோசனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அயோத்தி வழக்கின் தீர்ப்பால் நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு: உபி தலைமை செயலர், டிஜிபியுடன் ரஞ்சன் கோகாய் சிறப்பு ஆலோசனை

புதுடெல்லி: அயோத்தி வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், உத்திரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர், டிஜிபியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அங்கு 4500 துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2. 77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாள்களாக விசாரித்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியோடு ஓய்வு பெற இருப்பதால், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஒருசில நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், அயோத்தியில் வாழும் மக்களிடையே பதற்றநிலை காணப்படுகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்த விவாதிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இன்று காலை உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் அனுப் சந்திர பாண்டே, மாநில காவல் துறை தலைவர் (டிஜிபி) ஓம்  பிரகாஷ் சிங் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் பாதுகாப்பு முன்னேற்றபாட்டின் ஒரு பகுதியாக, ரயில்வே காவல்துறையினர் தங்களது விடுப்பை ரத்துசெய்து, 78 முக்கிய ரயில் நிலையங்களிலும் விழிப்புடன் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தரபிரதேசத்தில் கூடுதலாக 4,500 துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவான அறிவுறுத்தல் அறிக்கையை அனுப்பி உள்ளது.

இதற்கிடையே, அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு, கோவா அரசு நேற்று சில தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக, கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் விகாஸ் எஸ். என். கனேகர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘அயோத்தி தீர்ப்பை வழங்கியவுடன் வகுப்புவாத ஒற்றுமைக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பல்வேறு குழுக்களின் ஊர்வலங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் அமைதியைக் குலைக்கும் வகையில் இருக்க வாய்ப்புள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் சில இடங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து இருத்தல், ஊர்வலங்கள் அல்லது பேரணிகளை மேற்கொள்வது, துப்பாக்கி, வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்வது, ஒலிபெருக்கி பயன்படுத்துதல், கோஷங்கள் எழுப்புதல், பொது இடங்களில் பட்டாசு வெடித்தல் ஆகியன தடை செய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

நவ. 13 அல்லது 15ம் தேதிக்குள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அயோத்தி தீர்ப்பு வழங்குவார் என்றும், அதற்கடுத்து ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு ஆகியவற்றிலும் தீர்ப்பு வெளியாக உள்ளது.

இதனிடையே தம் வசமுள்ள மேலும் சில முக்கியமான வழக்குகளை அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் எஸ். ஏ. போப்டேவிடம் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை