வால்பாறை அருகே ஊனமுற்ற குட்டி யானையுடன் தாய் யானை பாச போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வால்பாறை அருகே ஊனமுற்ற குட்டி யானையுடன் தாய் யானை பாச போராட்டம்

வால்பாறை: வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் உடல் ஊனமான குட்டியை விட்டு பிரிய மனமில்லாமல் தாய் யானை அதன் அருகிலேயே உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் வனங்களை விட்டு வெளியேறி கடந்த சில நாட்களாக மக்கள் வசிக்கும் பகுதியில் முகாமிட்டுள்ளன.

தாய்முடி, ஆனைமுடி, நல்லமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த 3 வாரங்களாக 8 மாதமான குட்டி யானையுடன் தாய் யானை ஒன்று உலா வருகிறது. குட்டி யானையின் வலது பின்னங்கால் தடித்து, பருமன் அதிகமாக காணப்படுகிறது.

மற்ற கால்கள் அனைத்தும் பலவீனமாக ஒல்லியாக காணப்படுகிறது.

இதனால் குட்டி யானையால் சரியாக நடக்க முடியவில்லை. குட்டி யானையை தும்பிக்கையால் தாய் யானை தூக்கி நிறுத்த முயல்கிறது.

ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை. இதனால் குட்டி யானையை விட்டு செல்ல முடியாமல் தாய் யானை தவித்து வருகிறது.

கூட்டத்தில் இருந்து பிரிந்து காணப்படும் இந்த தாய் மற்றும் குட்டி யானையின் பாசப்போராட்டம் காண்போர் மனதை கண்கலங்க வைக்கிறது. குட்டி யானைக்கு பிறவி ஊனமா? அல்லது கால் உடைந்து உள்ளதா என வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது தாய்முடி எஸ்டேட் புதுகாடு பகுதியில் தாய் யானையும், குட்டி யானையும் முகாமிட்டுள்ளன.

குட்டி யானையால் சரியாக நடமாட முடியாததால் அதனை விட்டுவிட்டு தாய் யானை உணவு உட்கொள்ள வனப்பகுதிக்கு செல்வதில்லை. மற்ற வன விலங்குகள் குட்டியை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் தாய் யானை அதன் அருகிலேயே இருந்து வருகிறது.

இதற்காக குடியிருப்பு பகுதியில் குட்டி யானையை விட்டுவிட்டு அந்த பகுதியிலேயே தாய் யானையும் உணவு தேடி வருகிறது. இதற்காக குடியிருப்புகளை உடைத்தும், சேதப்படுத்தியும் வருகிறது.

கடந்த 2 நாட்களில் 6 வீடுகளை யானை ேசதப்படுத்தியுள்ளது. இந்த யானை பொதுமக்களை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

உணவிற்காக ஏங்கி நிற்கும் குட்டி யானைக்கு பிறவி ஊனமாக இருந்தால் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நோய்வாய்பட்டிருந்தால் மீட்டு சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அவ்வாறு செய்தால்தான் தாய் யானையும் வனப்பகுதிக்குள் செல்லும்.

எனவே இது குறித்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

மூலக்கதை