இன்றுடன் பேரவை பதவிக்காலம் முடிவதால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்றுடன் பேரவை பதவிக்காலம் முடிவதால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

மும்பை: சட்டப் பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதால், சிவசேனா எம்எல்ஏக்கள் மும்பையிலும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜஸ்தானிலும் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் பதவியை பட்நவிஸ் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால், மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் தற்போதைய பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். இல்லையெனில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசியலில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் நாளை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிராவின் அட்வகேட் ஜெனரல் ஆசுதோஷுடன் ஆளுநர் கோஷ்யாரி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ெபரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜ - சிவசேனாவுக்கு பெரும்பான்மை இருந்தும், முதல்வர் பதவி விவகாரத்தால், இரு கட்சிகளும் பிரிந்து நிற்கின்றன.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளின்படி, மொத்தமுள்ள 288 இடங்களில், பாஜ - 105, சிவசேனா - 56, தேசியவாத காங்கிரஸ் கட்சி - 54, காங்கிரஸ் - 44 எம்எல்ஏக்களை வைத்துள்ளன. மீதி இடங்களை சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் வைத்துள்ளனர்.

தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களான நிலையில், புதிய அரசு அமையாததால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இன்றுடன் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் பதவிக்காலம் முடிவதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இன்றிரவுக்குள் கூட்டணி கட்சிக்குள் பேச்சுவார்த்தை முடிவு பெற்று ஆளுநரை சந்தித்து உரிமை கோரினால் மட்டுமே, நாளை புதிய அரசு பதவியேற்க முடியும். அதனால், கடைசிகட்ட முயற்சியாக பாஜ - சிவசேனா கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

அதுவும் நேற்றிரவு முதல், அந்தந்த கட்சிகள் தங்களது எம்எல்ஏக்களை பாதுகாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், மோகன் பகவத் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத், ‘‘பகவத்துக்கும் தாக்கரேவுக்கும் இடையில் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை’’ என்று கூறினார்.

மும்பை ஓட்டல் ரங்ஷார்டாவில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்எல்ஏக்களை, சிவசேனா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆதித்யா தாக்கரே நேற்றிரவு சந்தித்தார். பின்னர், அவர் நள்ளிரவில் ஓட்டலில் இருந்து கிளம்பினார்.

இந்நிலையில், சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜஸ்தானுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை, அக்கட்சி தலைமை எடுத்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலோர் இன்று அதிகாலையில் ஜெய்ப்பூர் ெசன்றனர்.

மீதமுள்ள எம்எல்ஏக்கள் பிற்பகலுக்குள் ராஜஸ்தான் வந்து சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அழைத்து செல்லப்பட்ட மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அங்குள்ள ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதனால், மகாராஷ்டிரா அரசியலில் கடைசிநேர பரபரப்புகள் அரங்கேறி உள்ளன.

.

மூலக்கதை