மறைமலைநகர் அருகே நள்ளிரவில் தனியார் ஆம்னி பஸ் குபீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மறைமலைநகர் அருகே நள்ளிரவில் தனியார் ஆம்னி பஸ் குபீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

செங்கல்பட்டு: கோயம்பேட்டில் இருந்து குமுளிக்கு புறப்பட்ட தனியார் ஆம்னி பஸ், மறைமலைநகர் அருகே நள்ளிரவில் குபீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; உடமைகள் எரிந்து நாசமானது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று நள்ளிரவு 11. 45 மணியளவில் குமுளிக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது.

தாம்பரத்தை சேர்ந்த சிக்கந்தர் (50), பஸ்சை ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவரான தேனியை சேர்ந்த ஆனந்தன் (35) என்பவரும் முன்பகுதியில் அமர்ந்திருந்தார்.

பஸ்சில், 35 பயணிகள், பயணம் செய்தனர்.

நள்ளிரவு என்பதால், பயணிகளில் பலர் தூங்கி விட்டனர். 12. 30 மணியளவில் கூடுவாஞ்சேரி அருகே பஸ் சென்றபோது, இன்ஜினில் இருந்து திடீரென குபுகுபுவென புகை வந்தது.

இதனால் திகைத்து போன சிக்கந்தர், பஸ்சை மெதுவாக இயக்கினார். சிறிது நேரத்தில், தீப்பிடிக்க ஆரம்பித்தது.

அதிர்ச்சியடைந்த அவர், காட்டாங்கொளத்தூர் அருகே சாலையோரம் பஸ்சை நிறுத்தினார். பின்னர் பயணிகள் அனைவரையும் அவசர அவசரமாக கீழே இறங்கும்படி கூறினார்.

தூக்கத்தில் இருந்தவர்கள் என்னவென்றே தெரியாமல் அலறியடித்து கீழே இறங்கினர்.

அடுத்த சில வினாடிகளில் பஸ் மளமளவெ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. டிரைவர்கள் மற்றும் பயணிகள், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.

உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மறைமலைநகர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது.

பஸ்சில் வைத்திருந்த பயணிகளின் பல லட்சம் மதிப்பிலான உடமைகள் எரிந்து நாசமானது.

இதற்கிடையில் தகவல் அறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் வழக்கு பதிந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை