அயோத்தி குறித்து காங்.,10ல் ஆலோசனை

தினமலர்  தினமலர்
அயோத்தி குறித்து காங்.,10ல் ஆலோசனை

அயோத்தி தீர்ப்பு, குளிர்கால கூட்டத்தொடர் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், பா.ஜ.,வைப் போலவே முன்தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, காங்கிரஸ் உயர் மட்டக்குழு கூடுகிறது.அயோத்தி தீர்ப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அமைப்பான, செயற்குழு கூட்டம், நாளை மறுநாள் கூடவுள்ளது. வெளியாகப்போகும் அயோத்தி தீர்ப்பு குறித்து, கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி ஆலோசிப்பதற்காக, இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.மத்திய அரசு, ஆகஸ்ட், 5ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை அதிரடியாக ரத்து செய்தபோது, காங்., மூத்த தலைவர்கள் பலரும், ஆளாளுக்கு ஒரு கருத்தைப் பேசியதால், கட்சியின் நிலைப்பாடு கிண்டலுக்கு உள்ளானது.பார்லி., கூட்டத்தொடருக்கு பின்தான், செயற்குழு கூட்டத்தை கூடி, கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்து அறிவிக்க வேண்டிய நிலைக்கு, தள்ளப்பட்டது.


அயோத்தி விவகாரத்தில், அதுபோல நடந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தீர்ப்புக்கு முன்பே, தங்களது அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இதுதான் என்பதை இறுதி செய்யவும், திட்டமிடப்பட்டுள்ளது.அதற்காக, நாளை மறுநாள், சோனியா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த தலைவர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

தவிர, தற்போது, மத்திய அரசை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார மந்தநிலை,வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்னை ஆகியவற்றுக்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்தும், இவற்றை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்தும், கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

வரும், 18ல் துவங்கவுள்ள குளிர்கால கூட்டத்தொடரில், ஆளுங் கட்சிக்கு எப்படி நெருக்கடி தருவது, இரு சபைகளிலும், பிற கட்சிகளின் ஒத்துழைப்பை எப்படி பெறுவது மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள், வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை குறித்தும் கூட்டத்தில், ஆலோசிக்கப்பட இருக்கிறது.கடந்த, ஆகஸ்டில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தான், ராகுலுக்கு பதிலாக, இடைக்கால தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் நடை பெறும் முதல் கூட்டம் இதுதான்.

- நமது டில்லி நிருபர் -


மூலக்கதை