நுாறு... ரோகித் ஜோரு: வங்கத்தை சாய்த்தது இந்தியா | நவம்பர் 07, 2019

தினமலர்  தினமலர்
நுாறு... ரோகித் ஜோரு: வங்கத்தை சாய்த்தது இந்தியா | நவம்பர் 07, 2019

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில்இந்தியா தோற்றது. இரண்டாவது போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்தது.‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார்.

சகால் ‘இரண்டு’

வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ், முகமது நயீம் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. 17, 26 ரன்கள் என இரு முறைஅவுட் வாய்ப்பில் தப்பினார் லிட்டன் தாஸ்(29) ‘ரன் அவுட்’ஆனார்.நயீம் (36), ஸ்ரேயாசிடம் சிக்கினார்.

சகால் தனது 3வது ஓவரில் இந்திய அணிக்கு திருப்பம் தந்தார். முதல் பந்தில் அபாயகரமான முஷ்பிகுர் ரகிம் (4), கடைசி பந்தில் சவுமியா சர்காரை (30) அவுட்டாக்கினார். கலீல்‘வேகத்தில்’ ஆபிப் ஹொசைன்(6) அவுட்டாகினார். சகாரிடம் சரிந்தார் மகமதுல்லா (30).

வங்கதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. மொசதெக் (7), அமினுல் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் சகால் 2, வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது, சகார் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

ரோகித் அரைசதம்

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் கொடுத்தது. முஸ்தபிஜுரின் 2வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என 15 ரன்கள் எடுத்தார் ரோகித். ஷபியுல், ஆபிப் பந்துகளில் சிக்சர் அடித்த ரோகித், 23வது பந்தில் அரைசதம் எட்டினார். மொசாதெக் ஓவரில் ரோகித், ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து மிரட்டினார். இந்திய அணி 9.2வது ஓவரில் 100 ரன்களை கடந்தது.

முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த போது தவான் (31) போல்டானார். சதம் அடிப்பார் என நம்பப்பட்ட ரோகித், 43 பந்தில் 85 ரன்னுக்கு அவுட்டாகினார். அமினுல் பந்தை ஸ்ரேயாஸ் சிக்சருக்கு விரட்ட, இந்திய அணியின் வெற்றி எளிதானது.

இந்திய அணி 15.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் (24), லோகேஷ் ராகுல் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ‘டுவென்டி–20’ தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 10ம் தேதி நாக்பூரில் நடக்கவுள்ளது.

 

மூலக்கதை