ஐ.பி.எல்., தொடரில் தேசிய கீதம் | நவம்பர் 07, 2019

தினமலர்  தினமலர்
ஐ.பி.எல்., தொடரில் தேசிய கீதம் | நவம்பர் 07, 2019

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் ஒவ்வொரு போட்டிக்கு முன், தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என பி.சி.சி.ஐ.,க்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் ‘நம்பர்–1’ கிரிக்கெட் லீக் தொடராக, இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) திகழ்கிறது. இதன் 13வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் துவங்குகிறது. இம்முறை துவக்கவிழா ரத்து செய்யப்பட்டது, ‘நோ பால்’ கண்காணிக்க புதிய அம்பயர் என பல புதுமைகள் கொண்டு வரப்படுகின்றன.

இதற்கிடையே ஒவ்வொரு போட்டி துவங்குவதற்கு முன், தேசிய கீதம் பாடப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் என பஞ்சாப் அணி சக உரிமையாளர் நெஸ் வாடியா வலியுறுத்தி உள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) கடிதம் எழுதி உள்ளார்.

அவர் கூறுகையில்,‘‘ஐ.பி.எல்., துவக்க விழா ரத்து முடிவை வரவேற்கிறேன். அதேநேரம் ஐ.எஸ்.எல்., கால்பந்து, புரோ கபடி லீக் தொடர்களைப் போல, ஐ.பி.எல்., தொடரில் ஒவ்வொரு போட்டி துவங்குவதற்கு முன், தேசிய கீதம் பாடுவதை கட்டாயமாக்க வேண்டும். அமெரிக்காவை சேர்ந்த என்.பி.ஏ., கூடைப்பந்து தொடர், இந்தியா மற்றும் சீனாவில் நடத்தப்படுகிறது. இதுபோல, ஐ.பி.எல்., அணிகளுக்கு இடையே வெளிநாட்டில் நட்பு போட்டிகள் நடத்தப்பட வேண்டும்,’’ என்றார்.

 

மூலக்கதை