‘சூப்பர்’ ஜோடி | நவம்பர் 07, 2019

தினமலர்  தினமலர்
‘சூப்பர்’ ஜோடி | நவம்பர் 07, 2019

ரோகித், தவான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் எடுத்த ஜோடி என்ற பெருமை பெற்றனர். இதற்கு முன் ரோகித், ரெய்னா இணைந்து 2வது விக்கெட்டுக்கு 102 ரன் எடுத்ததே அதிகம்.

* ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக முறை 100 ரன்னுக்கும் மேல் சேர்த்த முதல் ஜோடி ஆகினர். இவர்கள் 4 முறை இதுபோல ரன்கள் சேர்த்தனர். இதற்கு முன் கப்டில்–முன்ரோ (நியூசி.,), கோஹ்லி–ரோகித் (இந்தியா), கப்டில்–வில்லியம்சன் (நியூசி.,) வார்னர்–வாட்சன் (ஆஸி.,) ஜோடி தலா 3 முறை 100 ரன்னுக்கும் மேல் எடுத்தனர்.

இந்திய கிரிக்கெட்டில் 100 வது டெஸ்டில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை கவாஸ்கருக்கு (1984) கிடைத்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த இலக்கை எட்டிய முதல் இந்தியர் ஆனார் கபில்தேவ் (1987). தற்போது 100வது சர்வதேச ‘டுவென்டி–20’ ல் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் ரோகித் சர்மா. 

நேற்று 85 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, 2019ம் ஆண்டில் பங்கேற்ற மூன்று வித கிரிக்கெட்டிலும் இணைந்து 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை 1,232 ஒருநாள், 529 டெஸ்ட், 300 ‘டுவென்டி–20’ ரன்கள் என, மொத்தம் 2,061 ரன்கள் எடுத்துள்ளார்.

2500

ராஜ்கோட்டில் 48 ரன்கள் எடுத்த போது, இந்திய அணிக்காக ‘டுவென்டி–20’ போட்டிகளில் 2,500 ரன்கள் எடுத்த முதல் வீரர் ஆனார் ரோகித். இதுவரை 100 போட்டிகளில் 2,537 ரன்கள் எடுத்துள்ளார். கோஹ்லி (2,450), தோனி (1,617) அடுத்தடுத்து உள்ளனர்.

380

வங்கதேச அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் ரோகித் சர்மா. இவர் 10 போட்டியில் 450 ரன்கள் எடுத்துள்ளார். ஜிம்பாப்வேயின் மசகட்சா (377), இலங்கையின் குசால் பெரேரா (365) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

* இந்திய அளவில் தவான் (258), கோஹ்லி (129) உள்ளனர்.

23

கடந்த 2017ல் இலங்கை மற்றும் நேற்று என ‘டுவென்டி–20’ அரங்கில் இரண்டாவது முறையாக 23 பந்தில் அரைசதம் எட்டினார் ரோகித் சர்மா. 2016ல் விண்டீஸ் அணிக்கு எதிராக 22 பந்தில் அரைசதம் அடித்தது முதலிடத்தில் உள்ளது.

11

சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக முறை 50 ரன்னுக்கும் மேல் எடுத்த ஜோடி வரிசையில் இந்தியாவின் ரோகித், தவான் (11), நியூசிலாந்தின் வில்லியம்சன், கப்டில் ஜோடியுடன் (11) இணைந்து இரண்டாவது இடம் பெற்றனர். ஸ்காட்லாந்தின் ஜார்ஜ், கோயட்சர் (12) ஜோடி முதலிடத்தில் உள்ளது.

‘டுவென்டி–20’ அரங்கில் 100 போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் ஆனார் ரோகித் சர்மா. சர்வதேச அரங்கில் அதிக ‘டுவென்டி–20’ல் பங்கேற்ற வீரர்களில் சோயப் மாலிக்கிற்கு (111, பாக்.,) அடுத்த இடம் பிடித்தார். அப்ரிதி (99, பாக்.,), தோனி (98, இந்தியா) அடுத்து உள்ளனர்.

ரிஷாப் சொதப்பல்

நேற்று சகால் வீசிய போட்டியின் 5.3வது ஓவரில் லிட்டன் தாசை (17), ‘ஸ்டம்பிங்’ செய்தார் ரிஷாப் பன்ட். ஆனால், ஸ்டம்சிற்கு முன் சென்று, ரிஷாப் பந்தை பிடித்தது ‘ரீப்ளேயில்’ உறுதியாக, ‘நோ பால்’ தரப்பட்டது. 

* அடுத்து 26 ரன் எடுத்த போது கொடுத்த எளிய ‘கேட்சை’ ரோகித் சர்மா கோட்டை விட்டார். பின் 29 ரன்னில் ரன் அவுட்டாகி திரும்பினார்.

சுந்தர் ஆறுதல்

தமிழக அணியின் சுழற்பந்து வீச்சு ‘ஆல் ரவுண்டர்’ வாஷிங்டன் சுந்தர். இந்திய அணிக்காக கடைசியாக பங்கேற்ற நான்கு ‘டுவென்டி–20’ போட்டிகளில் மொத்தம் 14 ஓவர்கள் வீசி, 94 ரன்கள் விட்டுக் கொடுத்து, ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 

நேற்றும் முதல் 3 ஓவரில் 17 ரன் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. நல்லவேளையாக 4வது ஓவரின் 3வது பந்தில் நயீம், அவுட்டானது ஆறுதலாக இருந்தது. 

திடீர் குழப்பம்

சகால் ஓவரில் (12.6), சவுமியா சர்காரை நேற்று ‘ஸ்டம்பிங்’ செய்தார் ரிஷாப் பன்ட். இவர் பந்தை ‘ஸ்டம்சிற்கு’ முன் சென்று பிடித்தாரா என ‘ரீப்ளேயில்’ பார்த்த மூன்றாவது அம்பயர் அனில் சவுத்ரி (இந்தியா), ‘நாட் அவுட்’ கொடுக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ந்தனர். 

ஆனால் களத்தில் இருந்த அம்பயர்கள், ‘ஸ்கிரீனில்’ தவறு நடந்துள்ளது, இது அவுட் தான் என்றனர். பின் ‘அவுட்’ என காண்பிக்கப்பட, சவுமியா வெளியேறினார்.

மூலக்கதை