சித்துவுக்கு விசா வழங்கியது பாக்

தினமலர்  தினமலர்
சித்துவுக்கு விசா வழங்கியது பாக்

இஸ்லாமாபாத்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, கர்தார்பூர் சாலை திட்ட துவக்க விழாவில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் அரசு, 'விசா' வழங்கியுள்ளது.

நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரில் இருந்து, அண்டை நாடான பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு, 4 கி.மீ., நீளத்துக்கு, இரு நாட்டு அரசுகளும் இணைந்து சாலை அமைத்துள்ளன. கர்தார்பூரில் உள்ள குரு நானக் நினைவிடத்துக்கு, சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையை, பாக்., பிரதமர் இம்ரான் கான், நாளை திறந்து வைக்கிறார். பாக்., பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற விழாவில், ஏற்கனவே, சித்து பங்கேற்றார். அப்போது அவர், பாக்., ராணுவ தளபதி யை கட்டித் தழுவியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சாலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, காங்கிரசைச் சேர்ந்தவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, பாக்., அரசு, 'விசா' வழங்கியுள்ளது. இதை ஏற்பதாகவும், விழாவில் பங்கேற்பதற்காகவும், சித்து தெரிவித்துள்ளதாக, பாக்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது: கர்தார்பூர் சாலை திட்ட துவக்க விழா, வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இதில், நவ்ஜோத் சித்து என்ற தனி நபருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு, அவர் கூறினார். கர்தார்பூருக்கு வரும் பக்தர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம் என, பாக்., ராணுவம் கெடுபிடி காட்டும் நிலையில், இந்த நிபந்தனையை பிரதமர் இம்ரான் கான் நீக்கியிருப்பதாக, அந்நாட்டுவெளியுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை