மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை வருகிற 16ம் தேதி திறப்பு

தினகரன்  தினகரன்
மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை வருகிற 16ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.  சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1ம்  தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஐய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளிலிருந்தே விரதம் தொடங்கி இருமுடி கட்டி சபரி மலை ஐய்யப்பன் கோவிலுக்கு சென்று ஐய்யப்பனை தரிசனம் செய்வார்கள். நடப்பு மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை வருகின்ற 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பின்னர் மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை அடுத்த மாதம் 27ம் தேதியும், ஜனவரி 15ம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறும்.இதனை தொடர்ந்து சபரிமலையில் பெண்கள் தரிசனத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடந்த ஆண்டை போல் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, சபரிமலையில் இந்த ஆண்டு கூடுதலாக அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பம்பை சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

மூலக்கதை