ஓராண்டுக்கு முன்பே பாக்தாதி மனைவி கைது

தினமலர்  தினமலர்
ஓராண்டுக்கு முன்பே பாக்தாதி மனைவி கைது

இஸ்தான்புல்: சமீபத்தில் கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் மனைவியை ஓராண்டுக்கு முன்பே கைது செய்ததாக மத்தியக் கிழக்கு நாடான துருக்கி தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கியிருந்தார். அமெரிக்கப் படைகள் அங்கு அதிரடியாக நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டன. அப்போது மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து பாக்தாதி தற்கொலை செய்ததாக அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில் பாக்தாதியின் சகோதரி மற்றும் அவருடைய கணவரை கைது செய்ததாக துருக்கி சமீபத்தில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பாக்தாதியின் மனைவியையும் கைது செய்ததாக துருக்கி அறிவித்துள்ளது.

இது குறித்து துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்டோகன் கூறியதாவது: பாக்தாதியின் மனைவியை கடந்தாண்டு ஜூன் 2ல் சிரிய எல்லையில் கைது செய்தோம். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல் கிடைத்தன. அதனடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை இதுவரை ரகசியமாக வைத்திருந்தோம். இவ்வாறு கூறினார்.
துருக்கி ராணுவ உயர்அதிகாரிகள் கூறியதாவது: பாக்தாதியின் முதல் மனைவியை நாங்கள் கைது செய்தோம். விசாரணையில் தனது பெயர் ரணியா மஹ்மூத் என்று அவர் கூறினார். ஆனால் அவருடைய உண்மையான பெயர் அஸ்மா பாஸ்ஸி மஹ்மூத் அல்கயாப்ஸி. அவருடன் அவர்களுடைய மகளையும் கைது செய்தோம். மரபணு சோதனையின் மூலம் அவர்களை உடனடியாக அடையாளம் கண்டோம். விசாரணையில் ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் உள்பட பல தகவல்களை பாக்தாதியின் மனைவி தெரிவித்தார். மேலும் எங்களிடம் இருந்த பல தகவல்களும் உறுதிபடுத்தப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை