நிறுவன இணைப்பு நடவடிக்கைகள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்
நிறுவன இணைப்பு நடவடிக்கைகள் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்

புதுடில்லி:நடப்பு ஆண்டில், இந்தியாவில், நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு, 3.69 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக, ‘பேக்கர் மெக்கன்சி’ நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


இது குறித்து, இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உலகளவில் பொருளாதார நிலையில் சிக்கல்கள்இருந்தபோதிலும், இந்தியாவைப் பொறுத்தவரை இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள், அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து நிலையானதாக இருக்கும் என, எதிர்பார்க்கலாம்.

நாட்டில் மிகவும் சாதகமான வணிக சூழல் நிலவும்பட்சத்தில், தனியார் முதலீடுகள் அதிகளவில் உயரும்.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 2019 முதல், -2022ம் ஆண்டு வரையிலான காலத்தில், 7 சதவீதத்தை நெருங்கும் வகையில் இருக்கும். இதே காலகட்டத்தில், உலகளவிலான சராசரி வளர்ச்சி, 2.8 சதவீதமாக இருக்கும்.நடப்பு ஆண்டில், மொத்த பங்கு வெளியீட்டை பொறுத்தவரை, அதன் மதிப்பு, 24 ஆயிரத்து, 140 கோடி ரூபாயாக இருக்கும்.


இதுவே, 2020ல், 19 ஆயிரத்து, 170 கோடி ரூபாயாக குறையும். அதன்பின், 2021ல், 30 ஆயிரத்து, 530 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை