டேவிஸ் கோப்பை போட்டிகள் இடமாற்றம்: ‘தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர்’..பாக். டென்னிஸ் கழக தலைவர் காட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டேவிஸ் கோப்பை போட்டிகள் இடமாற்றம்: ‘தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர்’..பாக். டென்னிஸ் கழக தலைவர் காட்டம்

இஸ்லாமாபாத்: ‘ஆல் இந்தியா டென்னிஸ் அசோசியேஷன் மற்றும் சர்வதேச டென்னிஸ் கழக நிர்வாகிகள் தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர்’ என்று பாகிஸ்தான் டென்னிஸ் கழக தலைவர் சலீம் சைஃபுல்லா குற்றம்சாட்டியுள்ளார். இம்மாதம் 29 மற்றும் 30ம் தேதிகளில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆசியா-ஓசியானா தகுதி சுற்று போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக இருந்தன.

ஆனால் பாதுகாப்பு  இல்லை என்று கூறி, பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள இந்திய டென்னிஸ் வீரர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். இது குறித்து சர்வதேச டென்னிஸ் கழகத்துக்கு, ஆல் இந்தியா டென்னிஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கடிதம் எழுதினர்.   அதில், ‘போட்டி நடைபெறும் இடத்தை பாகிஸ்தானுக்கு வெளியே, வேறு ஏதாவது ஒரு நாட்டிற்கு மாற்ற வேண்டும்‘ என கோரிக்கை விடுத்திருந்தனர்.   இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சர்வதேச டென்னிஸ் கழகம், ‘வீரர்களின் பாதுகாப்பே முதன்மையானது.

அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. எனவே இரு நாடுகளுக்கும் பொதுவான நடுநிலையான ஒரு நாட்டில் இந்த போட்டிகள்  நடைபெறும்’ என்று அறிவித்துள்ளது.



சர்வதேச டென்னிஸ் கழகத்தின் இந்த முடிவை எதிர்த்து அப்பீல் செய்வோம் என பாக். டென்னிஸ் கழகத்தின் தலைவர் சலீம் சைஃபுல்லா நேற்று அறிவித்துள்ளார்.   இது குறித்து அவர் கூறுகையில், ‘‘டென்னிஸ் போட்டிகளை இடம் மாற்றுவது துரதிருஷ்டமான முடிவு. இது தொடர்பாக இன்று பாக்.

டென்னிஸ் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், சர்வதேச டென்னிஸ் கழகம் தங்களது  இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் தற்போது பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை. போர் நடைபெறவில்லை.

இயற்கை பேரழிவு எதுவும் நடைபெறவில்லை. தினமும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாகிஸ்தான் வந்து செல்கின்றனர்.

ஆனால்  டென்னிஸ் வீரர்களுக்கு மட்டும் பாகிஸ்தான் பாதுகாப்பான நாடாக தெரியவில்லை. இது மிகப்பெரிய ஜோக்.

இந்த விஷயத்தில் இந்திய டென்னிஸ் அசோஷியேஷன் மற்றும் சர்வதேச டென்னிஸ் கழக நிர்வாகிகள் தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றனர் என்றே நான் சொல்வேன்’’ என்று தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை, பாகிஸ்தான் தங்கள் நாட்டில் புல்தரை மைதானத்தில் நடத்துவதாக இருந்தது.

தற்போது வேறு நாட்டில் கடினமான களிமண் தரை மைதானத்தில் இப்போட்டிகள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள்  அதிகம் என்பதால், அது குறித்த கவலையும் அந்நாட்டு டென்னிஸ் கழக நிர்வாகிகளுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

55 ஆண்டுகளுக்கு பிறகு. . .

இந்திய டென்னிஸ் வீரர்கள் கடைசியாக டேவிஸ் கோப்பை தகுதி சுற்றில் கடந்த 1964ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று விளையாடினர். அதன் பின்னர் கடந்த 55 ஆண்டுகளாக இந்திய டென்னிஸ் வீரர்கள் பாகிஸ்தானில் விளையாடவே இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

1964ம் ஆண்டு லாகூரில் நடந்த அப்போட்டியில் இந்திய வீரர்கள் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். டேவிஸ் கோப்பையில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் மோதின.

இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

.

மூலக்கதை