மாறுபட்ட வியூகம் அமைத்துள்ளோம்: ரோஹித் ஷர்மா பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாறுபட்ட வியூகம் அமைத்துள்ளோம்: ரோஹித் ஷர்மா பேட்டி

ராஜ்காட்: எங்களது திட்டங்களை கூற முடியாது. ஆனால் இந்தப் போட்டியில் வெற்றி பெற மாறுபட்ட வியூகம் அமைத்துள்ளோம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் பொறுப்பு கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.   இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது.

புது டெல்லியில் கடந்த 3ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக இந்தியாவை வீழ்த்தி  வங்கதேசம் அதிர்ச்சியளித்தது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலம், ராஜ்காட்டில் நடைபெறுகிறது.

இப்போட்டிக்கான தீவிர வலை பயிற்சியில் நேற்று இரு அணியின் வீரர்களும் ஈடுபட்டனர். மஹா புயல் காரணமாக மழையின் குறுக்கீடு இன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டாஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.   கடந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை முதலில் பேட் செய்யுமாறு கூறியதோடு, இலக்கை துரத்தி 2வதாக பேட் செய்து, பதற்றமே இல்லாமல் எளிதாக வெற்றி பெற்றது.



இதனால் இந்திய வீரர்கள், தங்களை சுய பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இன்றைய போட்டியில் வங்கதேசம் வென்றால், இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும்.

மழை காரணமாக இன்றைய போட்டி  நடைபெறாமல் போனால், 3வது போட்டியில் இந்தியா வென்றாலும் தொடர் சமனில்தான் முடியும்.   இன்றைய போட்டி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு 100வது டி20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த மைல் கல்லை அடையும் முதல் இந்திய வீரர் என்ற சிகரத்தை அவர் எட்ட உள்ளார்.

பாகிஸ்தான் அணி வீரர் ஷோயப்  மாலிக், 111 டி20 போட்டிகளில் ஆடி, இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.   இன்றைய போட்டி குறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘‘நமது அணியின் பேட்டிங் வலிமை வாய்ந்ததுதான். அதில் குறை கூற முடியாது.

இன்று ஆடுகளத்தின் தன்மையை பார்த்து, பந்து வீச்சில் ஏதேனும் மாற்றம் இருக்கலாம். எங்களின் திட்டங்களை கூற முடியாது.

ஆனால் இப்போட்டியை பொறுத்தவரை மாறுபட்ட வியூகம் அமைத்துள்ளோம். இப்போட்டி முக்கியமான ஒன்று என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

கடந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்ததற்கு எந்த ஒரு தனி வீரரும் காரணமல்ல.

ஒரு அணியாக அனைவருமே அந்த தோல்விக்கு பொறுப்பேற்கிறோம். ஆனால் அந்த போட்டிகளில் செய்த தவறுகளை மறுபடியும் செய்ய மாட்டோம்.

பொறுத்திருந்து பாருங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.   ஐசிசி தரவரிசையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதலிடத்திலும், ஒருநாள் போட்டிகளில் 2ம் இடத்திலும் உள்ளது. ஆனால் டி20 தரவரிசையில் இந்திய அணி, தற்போது 5ம் இடத்தில் உள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான இந்த தொடரில்  தோல்வியடைந்தால் டி20 தரவரிசையில் இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை