13 பேராசிரியர்கள் மருத்துவக் கல்லூரி டீனாக பதவி உயர்வு: ஜெயலலிதாவுக்கு சான்றிதழ் வழங்கிய டாக்டருக்கும் டீன் பதவி

தமிழ் முரசு  தமிழ் முரசு
13 பேராசிரியர்கள் மருத்துவக் கல்லூரி டீனாக பதவி உயர்வு: ஜெயலலிதாவுக்கு சான்றிதழ் வழங்கிய டாக்டருக்கும் டீன் பதவி

சென்னை: தமிழகம் முழுவதும் 13 பேராசிரியர்களுக்கு மருத்துவக் கல்லூரி டீனாக பதவி உயர்வு வழங்கி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக சான்றிதழ் வழங்கிய பேராசிரியருக்கும் டீன் பதவி உயர்வு  வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் பணியாற்றிய பேராசிரியர் முத்துக்குமரன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியை குந்தவை  தேவி விழுப்புரம் மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் அல்லி ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், நெல்லை மருத்துவக்கல்லூரி பொது மருத்துவ  பேராசிரியர் ரவிச்சந்திரன் நெல்லை மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், காஞ்சிபுரம், அறிஞர் அண்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் இயக்குநராக இருந்த முத்துகிருஷ்ணன் புதிதாக விருதுநகரில் அமையவுள்ள மருத்துவக்கல்லூரியின்  முதல்வராகவும் நியமிக்கப்படுகின்றனர். மேலும், தேனி மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை தலைவர் முருகேசன் கோவை இ. எஸ். ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராகவும், மதுரை மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத் துறை பேராசிரியர் சங்குமணி  மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் சுகந்தி ராஜகுமாரி கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், நெல்லை மருத்துவக் கல்லூரி சிறுநீரக துறை பேராசிரியர் திருவாசகமணி  தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி நுண்துளை அறுவை சிகிச்சை பேராசிரியர் பாலாஜி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், கோவை மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத்துறை பேராசிரியர் ரவீந்திரன் நீலகிரியில் புதிதாக  அமையவுள்ள மருத்துவக்கல்லூரி முதல்வராகவும், மதுரை மருத்துவக்கல்லூரி இதய அறுவை சிகிச்சை பேராசிரியர் ரத்தினவேல் சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகவும், கோவை மருத்துவக் கல்லூரி பொது அறுவை சிகிச்சை  துறை பேராசிரியர் நிர்மலா திருப்பூரில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், பேராசிரியர் பாலாஜி, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.

அப்போது, ஜெயலலிதா, அதிமுக பொதுச்  செயலாளர் என்ற முறையில் வேட்பாளர்களுக்கு அங்கீகார கடிதம் அளித்தார். அப்போது அங்கீகார கடிதத்தில் ஜெயலலிதா கைரேகை பதிவிட்டிருந்தார்.

ஜெயலலிதா கைரேகை போட்டபோது கூட இருந்ததாக சான்றிதழ் கொடுத்தவர்தான் டாக்டர்  பாலாஜி. ஆனால் ஜெயலலிதா, கைரேகை போலியானது என்று உறுதியானதாக நீதிமன்றமே அறிவித்து விட்டது.

இதனால், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலும், சிபிஐ அலுவலகத்திலும் திமுக சார்பில்  மனு அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் டாக்டர் பாலாஜிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை