திருச்சி விமானநிலையத்தில் 33 கிலோ தங்கம் கடத்தலுக்கு உடந்தை 6 அதிகாரிகள் கைதாவார்களா?..2வது நாளாக 15 பேரிடம் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருச்சி விமானநிலையத்தில் 33 கிலோ தங்கம் கடத்தலுக்கு உடந்தை 6 அதிகாரிகள் கைதாவார்களா?..2வது நாளாக 15 பேரிடம் விசாரணை

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 33 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 6 அதிகாரிகள் சிக்கி உள்ளனர். இவர்கள் வங்கி கணக்கில் வியாபாரிகள் பணம் பரிமாற்றம் செய்தது அம்பலமாகி உள்ளது.

இதனால்,  அதிகாரிகள் மற்றும் 15 வியாபாரிகளிடம் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். 6 அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுவதால், பரபரப்பு நிலவுகிறது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான  பயணிகள் வந்து செல்கின்றனர்.

தமிழகத்தில் வேறு எந்த விமான நிலையத்திலும் இல்லாத வகையில், இங்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம், வெளிநாட்டு கரன்சி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள்  சுமார் ₹100 கோடி அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதனிடையே கடந்த 17ம் தேதி கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பணியில் இருந்தார்.

அப்போது சிகரெட் மற்றும் சென்ட் பாட்டில்களை அளவுக்கு அதிகமாக கொண்டு வந்த ஒருவர், விஜயகுமாரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல்  விடுத்தார். இதுகுறித்து விஜயகுமார் மேலதிகாரிகளுக்கு அனுப்பிய புகாரில், திருச்சி விமான நிலையத்தில் அதிகளவில் கடத்தல் நடக்கிறது.

தடுத்தால் மிரட்டுகிறார்கள். உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதனால் திருச்சி விமான நிலையத்தில் அதிரடி சோதனை நடத்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி திருச்சி, கோவை, மதுரை, சென்னையில் இருந்து 40 அதிகாரிகள் நேற்றுமுன்தினம் இரவு விமான  நிலையத்துக்கு வந்து, மலேசியாவிலிருந்து வந்த 3 விமானங்கள், ஷார்ஜாவிலிருந்து வந்த ஒரு விமானம் உள்பட 4 விமானங்களில் வந்திறங்கிய 150 பயணிகளிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

நேற்றும் விசாரணை தொடர்ந்தது.   அவர்களது உடமைகள் சோதனையிடப்பட்டன. இந்த சோதனையில் அனைவரிடமிருந்தும் சிறிய சிறிய அளவில் ₹11 கோடி மதிப்புள்ள 33 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் 33 கிலோ தங்கம் சிக்கியதால், அதிகாரிகள் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.   4 விமானங்களில் வந்த பயணிகளும் நேற்று மாலை வரை வெளியே அனுப்பப்படாததால் பரபரப்பு நிலவியது. இந்தநிலையில் சோதனை மற்றும் விசாரணை முடிந்து பயணிகள் அனைவரும் நேற்று மாலையில் வெளியே அனுப்பப்பட்டனர்.   தங்கம் கடத்தி வந்த 10 பேரிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவர்கள் 10 பேரும் குருவிகள் என்று கூறப்படுகிறது. இவர்களிடம் தங்கத்தை வாங்குவதற்காக விமான நிலையத்துக்கு வெளியில் நின்று கொண்டிருந்த  வியாபாரிகள் 15 பேரையும் அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம் கிட்டத்தட்ட கடத்தல் கேந்திரமாகவே மாறி உள்ளது.

அதிகாரிகள் துணையின்றி இது நடந்திருக்காது என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கருதுகின்றனர். இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட  அதிகாரிகள் யார் என்று கண்டறியும் முயற்சியில் இறங்கினர்.

கடந்த 2 நாட்களாக திருச்சி விமான நிலையத்தில் பணியில் இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் பட்டியலை எடுத்து விசாரித்தனர். அதில், 6 முக்கிய அதிகாரிகள் வியாபாரிகள் மற்றும்  குருவிகளுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்ததுள்ளது.

இதனால், 6 அதிகாரிகளிடமும் நேற்று இரவு முதல் விடிய விடிய விசாரணை நடந்தது. 2வது நாளாக இன்றும் அவர்களிடம் விசாரணை நீடித்து வருகிறது.

இதில், தங்கம் கடத்தலுக்கு  உடந்தையாக இருந்த விமான நிலைய அதிகாரிகளின் வங்கி கணக்குகளுக்கு வியாபாரிகள் பணம் பரிமாற்றம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த 6 அதிகாரிகளின் வங்கி கணக்குகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள்  ஆய்வு செய்து வருகின்றனர்.

தங்கம் கடத்தலுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததற்கான ஆதாரம் சிக்கி உள்ளதால், விசாரணையின் முடிவில் 6 அதிகாரிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் திருச்சி விமான  நிலையத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

.

மூலக்கதை