பரமக்குடியில் தந்தை சிலையை கமல்ஹாசன் திறந்து வைத்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பரமக்குடியில் தந்தை சிலையை கமல்ஹாசன் திறந்து வைத்தார்

பரமக்குடி: மநீம தலைவர் கமல்ஹாசன், இன்று காலை பரமக்குடியில் உள்ள தனது வீட்டில் தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் குடும்பத்தினர் மற்றும் மநீம கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் இன்று. அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி.

மேலும் இன்று கமல்ஹாசனின் தந்தை சீனிவாசனின் நினைவு தினம் என்பது  குறிப்பிடத்தக்கது. தனது பிறந்தநாளையொட்டி தந்தைக்கு சொந்த ஊரில் சிலை திறக்க கமல்ஹாசன் முடிவு செய்தார்.

இதற்காக பரமக்குடி அருகே தெளிச்சத்தநல்லூரில் 2 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, தந்தையின் சிலை திறப்பதற்கான பணிகள்  கடந்த 2 வாரமாக முழுவீச்சில் நடந்து வந்தன.

இன்று காலை 11 மணியளவில், தனது தந்தை சீனிவாசனின் மார்பளவு வெண்கல சிலையை கமலஹாசன் திறந்து வைத்தார். இதில் கமல்ஹாசனின் மகள்கள் சுருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன், சகோதரர் சாருஹாசன், இவரது மகள் நடிகை  சுஹாசினி உட்பட குடும்பத்தினர் மற்றும் கவிஞர் சினேகன் உட்பட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் மநீம கட்சிக்கொடியை கமல் ஏற்றி  வைத்தார்.

படம் திறப்பு ரத்து

சீனிவாசன் பரமக்குடி நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றியவர் என்பதால், நீதிமன்ற வளாகத்திலுள்ள பார் கவுன்சலில் வக்கீல்கள் சங்கம் சார்பில் சீனிவாசனின் படம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு சில வக்கீல்கள் எதிர்ப்பு  தெரிவித்ததால் படம் திறப்பது ரத்து செய்யப்பட்டது.

.

மூலக்கதை