கோவையில் சிறுவன், சிறுமி கொலை குற்றவாளிக்கு தூக்கு உறுதி: சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோவையில் சிறுவன், சிறுமி கொலை குற்றவாளிக்கு தூக்கு உறுதி: சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: கோவையில் சிறுவன், சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்.

ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகள் முஸ்கான்(11), மகன் ரித்திக் (8) ஆகிய இருவரும் கடந்த 2010 அக்டோபர் 29-ம்தேதி பள்ளி சென்றபோது, வேன் டிரைவர் மோகன்ராஜ், கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரால் கடத்தப்பட்டனர்.

உடுமலை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வாய்க்காலில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமியின் தம்பி ரித்திக்கும் வாய்க்காலில் தள்ளப்பட்டு, கொலை  செய்யப்பட்டார்.

இக்கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த இரட்டை கொலை தொடர்பாக, வேன் டிரைவர் மோகன்ராஜ், அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின்போது கடந்த 2010 ம் ஆண்டு நவம்பர் 9-ம்தேதி, குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்தை  காண்பிப்பதற்காக குற்றவாளிகள் இருவரும் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மோகன்ராஜ், போலீசாரின் கைத்துப்பாக்கியை பிடுங்கி அவர்களை நோக்கி சுட்டார்.

இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள்  ஜோதி, முத்துமாலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். போலீசார் திருப்பி சுட்டதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

எஞ்சிய குற்றவாளி மனோகரன் மீதான வழக்கு விசாரணை கோவை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில், மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றமும்  தண்டனையை உறுதிசெய்தது.

இதன்பின்னர், இவ்வழக்கு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றது. இதில் கடந்த ஆகஸ்ட் 1-ம்தேதி மனோகரனின் மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

கடந்த செப்டம்பர் மாதம் மனோகரனுக்கு  தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.
இந்த நிலையில், மனோகரன் தரப்பு வழக்கறிஞர், கீழ்கோர்ட்டில் மனோகரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை ஆய்வுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் அக்டோபர் 16-ம்தேதி வரை  மனோகரனை தூக்கில் போடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

அதைத் தொடர்ந்து குற்றவாளி தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், சஞ்சய் கண்ணா,  சூரியகாந்த் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணை நடந்தது.

விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அந்த தீர்ப்பில், ‘‘கோவை சிறுமி, சிறுவன் கொலை வழக்கில் மனோகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய முடியாது.   இதில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது’’ என்று கூறி, மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

.

மூலக்கதை