சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கில் விரைவில் தீர்ப்பு அயோத்தியில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் தயார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்ச்சைக்குரிய இடம் குறித்த வழக்கில் விரைவில் தீர்ப்பு அயோத்தியில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் தயார்

புதுடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் உத்திரப்பிரதேசத்தில் தற்காலிகமாக 8 சிறைச்சாலைகளை அம்மாநில அரசு அமைத்துள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் அயோத்தி வழக்கில் பலகட்ட விசாரணை, வாதங்களுக்கு பிறகு இவ்வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 4 ம் தேதி முதல் தொடர்ந்து 10 வேலை நாட்களில் முக்கியமான 5  வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளதாகவும், அதில் அயோத்தி வழக்கும் ஒன்று எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 14 ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால் வருகிற 13ம்  தேதிக்கு முன்னதாக அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீஸ்  குவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாலும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உ. பி. ,யில் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரி வளாகங்களில் 8 தற்காலிக சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பதற்றம் நிறைந்ததாக கருதப்படும் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் இந்த தற்காலிக சிறைச்சாலைகள்  அமைக்கப்பட்டுள்ளன.

பதற்ற நிலையை கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தகைய சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உ. பி. , சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை