தற்கொலைக்கு முயன்ற பெண் போலீசுக்கு காதலனுடன் திருமணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தற்கொலைக்கு முயன்ற பெண் போலீசுக்கு காதலனுடன் திருமணம்

தேன்கனிக்கோட்டை: தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ், உயரதிகாரிகள் சமரசத்தால் மனம் மாறிய காதலனை, போலீசாரின் முன்னிலையில் கரம் பிடித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன்.

இவரது மகள் நதியா (26), திருப்பூர் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். அதே ஊரைச்சேர்ந்த மாரிமுத்து மகன் கண்ணன்  (28).

அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றிய இவர், தற்போது கிருஷ்ணகிரியில் மோப்பநாய் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். உறவினர்களான நதியாவும், கண்ணனும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.   இந்நிலையில், நதியாவை திருமணம் செய்து கொள்ள கண்ணன் மறுத்து விட்டதால், மனமுடைந்த நதியா கடந்த 4ம் தேதி, எறும்பு சாக்பீஸ் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

உறவினர்கள் அவரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா விசாரணை மேற்கொண்டார்.

நதியா, கண்ணன் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து பேசினார். அப்போது, நதியாவை திருமணம் செய்து கொள்ள கண்ணன் சம்மதம் தெரிவித்தார்.   இதனை தொடர்ந்து, நேற்று தேன்கனிக்கோட்டை லட்சுமி நரசிம்மர் கோயிலில், பெற்றோர் மற்றும் போலீசார் முன்னிலையில் நதியா, காதலனை கரம்பிடித்தார்.

பின்னர், தேன்கனிக்கோட்டை சார்பாதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு  செய்த தம்பதிக்கு, சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

.

மூலக்கதை