துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை அமெரிக்கா பயணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை அமெரிக்கா பயணம்

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்கிறார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை முதல் 17ம் தேதி வரை அரசு முறை சுற்றுப் பயணமாக அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார்.

அங்கு, தமிழ்நாட்டிற்கான புதிய  திட்டங்களுக்கு தேவையான நிதிகள் பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அலுவலர்களுடன் விவாதிக்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்பரேஷன் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்திக்கிறார்.

வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை சார்ந்த  திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். சிகாகோ நகரில் உள்ள முக்கிய தொழில் முனைவோர்களுடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தல், சிகாகோ தமிழ் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சி, வட்ட மேசை  கருத்தரங்கு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதனால், நாளை அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரம் செல்கிறார். 9ம் தேதி மாலை சிகாகோ தமிழ் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

10ம் தேதி வட்டமேசை  கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். அப்போது, பன்னீர்செல்வத்துக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.

12ம் தேதி சிகாகோ நகர மேயர் மற்றும் இல்லினாய்ஸ் ஆளுநர் மற்றும் இதர முக்கிய பிரமுகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.   மேலும் 13ம் தேதி வாஷிங்டன் டிசி செல்கிறார்.

14ம் தேதி ஹூஸ்டன் நகருக்கு சென்று தமிழ் அமைப்புகள்  சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்குள்ள முக்கிய தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார். 15ம் தேதி ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான நன்கொடையாளர் அமர்வை தொடங்கி வைக்கிறார்.

16ம் தேதி நியூயார்க் சென்று தமிழ் அமைப்புகள் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 17ம்  தேதி தமிழகம் திரும்புகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் உடன் செல்கிறார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை